சென்னை : 'பண மதிப்பிழப்பு விஷயத்தில் ஏமாற்றியது போல, கொரோனா விஷயத்திலும் ஏமாற்றக்கூடாது; ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என, பிரதமர் மோடிக்கு, நடிகர் கமல் கடிதம் எழுதியுள்ளார்.
கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:பொறுப்புள்ள, ஏமாற்றமடைந்த குடிமகனாக, இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். பணமதிப்பிழப்பு பாணியில், மார்ச், 24ல், நாடு முழுதும் உடனடி ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தினீர்கள்.இந்த அறிவிப்பு அதிர்ச்சி கொடுத்தாலும், உங்களை நம்பினேன். பண மதிப்பிழப்பு நடவடிக்கை பற்றி அறிவித்த போதும், உங்களை நம்பினேன். வாழ்வாதாரம் ஆனால், இரண்டிலும், நான் நினைத்தது தவறு என, காலம் எனக்கு உணர்த்தியுள்ளது.
என் மிகப் பெரிய பயமே, பணமதிப்பிழப்பின் போது செய்த, அதே மாதிரியான பிழை, இன்னும் பெரிய அளவில் செய்யப்படுகிறதோ என்பது தான். வசதியான மக்களிடம், 'விளக்கு ஏற்றுங்கள்' என, நீங்கள் சொல்கிறீர்கள். நீங்கள் கேட்டு கொண்டதற்காக, வசதியானவர்கள் பால்கனியில் விளக்கு ஏற்றிய போது, ரொட்டி செய்யக்கூட எண்ணெய் இல்லாமல், ஏழை, எளிய மக்கள் கஷ்டப்படுகின்றனர்.வெறும், 'பால்கனி' அரசாக மட்டும், நீங்கள் இருக்க விரும்பமாட்டீர்கள். அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரமும் அழிக்கப்பட்டால், அது மேல்தட்டில் இருப்பவர்களை பாதிக்கும் என்பதையே, வரலாறு நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் தகவல்படி, 2019 டிசம்பர், 8ல், முதல் கொரோனா வைரஸ் பாதிப்பை, சீனா கண்டறிந்துள்ளது. இதை, எந்த நாடும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், இந்தாண்டு பிப்ரவரி முதல் வாரத்தில், உலக நாடுகள் விழித்துக் கொண்டன.பொய்த்து விட்டதுஇந்தியாவில், முதல் கொரோனா பாதிப்பு, ஜன., 30ல் கண்டறியப்பட்டது. இத்தாலியில் என்ன நடந்தது என்பதை, கண் முன்னே பார்த்துக் கொண்டிருந்த போதும், அதைப் பார்த்து, நாம் பாடம் கற்றுக் கொள்ளவில்லை.
ஒரு பிரச்னை பூதாகரமாகும் முன், அதற்கு விடை கண்டுபிடிப்பவர் தான், தொலைநோக்குடைய தலைவர். உங்களின் தொலைநோக்கு, இந்த முறை பொய்த்து விட்டது. உங்கள் அரசை யாராவது குறை கூறினால், அவர்கள் தேச விரோதி என, முத்திரை குத்தப்படுகின்றனர். யாரெல்லாம் அக்கறை கொண்டுள்ளனரோ அவர்களின் குரல்களை கேட்க வேண்டிய நேரமிது. நாங்கள் கோபத்தோடு உள்ளோம்; ஆனாலும், உங்களோடு தான் உள்ளோம்.இவ்வாறு, கடிதத்தில் கமல் கூறியுள்ளார்.
'சீன அதிபருக்கு எழுதுவது தானே?
'பிரதமருக்கு கடிதம் எழுதிய கமலை விமர்சித்து, நடிகை காயத்ரி ரகுராம், 'டுவிட்டரில்' கூறியிருப்பதாவது: நீங்கள் ஏன், சீன அதிபர் ஜின்பிங்கிற்கும், 'தப்லிக் - இ - ஜமாத்'துக்கும் கடிதம் எழுதி, அவர்களின் தோல்வியை சுட்டிக்காட்டாமல் உள்ளீர்கள். அரசின் உத்தரவுகளை மதிக்காத, குடிமக்களுக்கு கடிதம் எழுதுங்கள்.
தமிழக முதல்வரும், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் தோல்வியடைந்து விட்டனர் என்று சொல்கிறீர்களா...உங்களுக்கு ஏதாவது பிரச்னை இருந்தால், முதலில் மாநில அரசிடம் முறையிடுங்கள். மோடிக்கு கடிதம் எழுதுவது, இப்போது ஒரு, 'டிரண்ட்' ஆகிவிட்டது. நேற்று அனைவரும் ஒற்றுமையை காட்டினர்; நீங்கள் அதில் பங்கேற்கவில்லை என, வேதனையாக இருக்கிறீர்களா...
மத்திய, மாநில அரசுகளின் கடும் உழைப்பை, நீங்கள் பார்க்க மறுக்கிறீர்கள். மேம்போக்கான கடிதத்தை எழுதாதீர்கள்; உரிய தகவல்களோடு எழுதுங்கள். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE