தாராளமாக நிவாரண நிதி கொடுங்கள் ; முதல்வர் இ.பி.எஸ்., வேண்டுகோள்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தாராளமாக நிவாரண நிதி கொடுங்கள் ; முதல்வர் இ.பி.எஸ்., வேண்டுகோள்

Added : ஏப் 08, 2020 | கருத்துகள் (2)
Share
 தாராளமாக நிவாரண நிதி கொடுங்கள் ;  முதல்வர் இ.பி.எஸ்., வேண்டுகோள்

சென்னை : -'கொரோனா தடுப்பு பணிகளுக்கு, தொழிலதிபர்கள், முன்னணி தனியார் நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள், நன்கொடையாளர்கள் மற்றும் பொதுமக்கள், தாராளமாக நிதியுதவி வழங்க வேண்டும்' என, முதல்வர், இ.பி.எஸ்., வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை:கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து, தமிழக மக்களை பாதுகாக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை, போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது. தமிழகத்தில் உள்ள, ஒவ்வொரு குடும்பத்தின் நலனையும் பாதுகாக்க, நிதியுதவி மற்றும் அத்தியாவசிய பொருட்கள், இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.ஆதரவற்றோர், முதியோர், மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர், அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்கள், வெளி மாநில தொழிலாளர்கள் ஆகியோருக்கு, நிவாரணம், தங்குமிடம், உணவு, மருத்துவ வசதி செய்து தரப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக, நிதியுதவி அளிக்க வேண்டும் என, அரசு கோரிக்கை வைத்தது.

இந்த கோரிக்கையை ஏற்று, முதல்வர் நிவாரண நிதிக்கு, பலரும் தாராளமாக நிதி அளித்து வருகின்றனர்.சிறுவர், சிறுமியர், மாணவர்கள் தங்களால் இயன்ற, சிறிய பங்களிப்பை, பெரிய மனதுடன் வழங்கி, தங்கள் கருணை உள்ளத்தை, வெளிப்படுத்தி வருகின்றனர்.கொரோனா வைரஸ் தொற்றை, திடமாக எதிர்கொண்டு சமாளிப்பதோடு, வரும் காலங்களிலும், நோய் தடுப்பு நடவடிக்கைகளை, தீவிரப்படுத்த வேண்டியுள்ளது.

இவற்றை செம்மையாக செய்ய, தொழில் அதிபர்கள், முன்னணி தனியார் நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள், நன்கொடையாளர்கள் மற்றும் தமிழக மக்களின் பங்களிப்பை, தமிழ்நாடு அரசு நாடுகிறது.'சிறு துளி பெரு வெள்ளம்' என்ற முதுமொழிக்கேற்ப, தமிழகத்தில் உள்ள, ஒவ்வொருவரும் சிறு தொகையை வழங்கினாலே, இப்பேரிடர் நேரத்தில், ஏழை மக்களை காப்பாற்ற, பேருதவியாக இருக்கும்.முதல்வர் பொது நிவாரண நிதிக்கு, வங்கி இணைய சேவை, கடன் அட்டை, பற்று அட்டை பயன்படுத்தி, https://ereceipt.tn.gov.tn.gov.in/cmprf/cmprf.html என்ற, இணையதளம் வழியே செலுத்தி, ரசீது பெற்றுக் கொள்ளலாம்.

இ.சி.எஸ்., எனப்படும், எலக்ட்ரானிக் கிளியரிங் சிஸ்டம் வழியே, இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு நேரடியாக அனுப்பலாம். நன்கொடைகளுக்கு, வருமான வரி சட்டம் பிரிவு, '80 - ஜி'யின் கீழ், 100 சதவீத வரி விலக்கு உண்டு. வெளிநாடு வாழ் இந்தியர்கள் அல்லது அயல்நாட்டு மக்களிடமிருந்து பெறப்படும் நிவாரணத்திற்கு, அயல்நாட்டு பங்களிப்பு சட்டத்தின் கீழ் விலக்கு அளிக்கப்படும். அனைத்து நன்கொடைகளுக்கும், உரிய ரசீதுகள் அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு, முதல்வர், இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.

நிவாரண நிதி அளிக்க வசதி வங்கி பெயர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி; கிளை, தலைமை செயலகம், சென்னை- - 9; சேமிப்பு கணக்கு எண், 117201000000070; ஐ.எப்.எஸ்., கோடு -- IOBA0001172; CMPRF PAN -: AAAGC0038F இ.சி.எஸ்., வழியே நிதி அனுப்புவோர், அலுவலக பற்றுச்சீட்டை பெற, தங்கள் பெயர், செலுத்தும் தொகை, வங்கி மற்றும் கிளை, செலுத்தப்பட்ட தேதி, நிதி அனுப்பியதற்கான எண், முழுமையான முகவரி, இ- - மெயில் முகவரியை தெரிவிக்க வேண்டும் வெளிநாடு வாழ் மக்கள், IOBAINBB001 Indian Overseas Bank, central office, chennai என்ற, கோடை பின்பற்றி, நிதி அளிக்கலாம்.

 மின்னணு வழியே, பரிவர்த்தனை செய்ய இயலாதவர்கள், குறுக்கு கோடிட்ட காசோலை அல்லது வங்கி வரைவோலை வழியே, 'அரசு துணை செயலர் மற்றும் பொருளாளர், கொரோனா நிவாரணத்திற்கான முதல்வர் பொது நிவாரண நிதி, நிதித்துறை, தமிழ்நாடு அரசு, தலைமை செயலகம், சென்னை- - 9, தமிழ்நாடு, இந்தியா' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். மேலும் விபரங்களுக்கு, dspaycell.findpt@tn.gov.in என்ற, 'இ - மெயில்' முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X