சென்னை : 'கொரோனா வைரஸ்' தாக்கி இருக்கலாம் என, தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களை கண்காணிக்க, போலீசார் அறிமுகம் செய்துள்ள, 'மொபைல் ஆப்' வாயிலாக, 'டெலி மெடிசன்' அளிக்க, முடிவு செய்யப்பட்டு உள்ளது.
வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தவர்கள், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என,ஆயிரக்கணக்கானோர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களின் வீடுகளில், 'ஸ்டிக்கர்' ஒட்டப்பட்டு உள்ளது. மேலும், தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களின் கைகளில், முத்திரை குத்தப்பட்டு உள்ளது. அவர்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதால், மற்றவர்களுக்கும், கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

இதனால், தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களை கண்காணிக்க, தமிழக காவல் துறை சார்பில், 'COVID- 19 Quarantine monitor' என்ற, 'மொபைல் ஆப்' அறிமுகம் செய்யப்பட்டது.அதிகாரிகள் முடிவு இதில், சில புதிய வசதிகளை ஏற்படுத்த, போலீஸ் அதிகாரிகள் முடிவுசெய்துள்ளனர்.
இதுகுறித்து, மாநில சட்டம் - ஒழுங்கு, கூடுதல் டி.ஜி.பி., ஜெயந்த் முரளி கூறியதாவது: இந்த மொபைல் ஆப்பில், ஏற்கனவே, கொரோனா அறிகுறிஉள்ளவர்களின் பெயர், பாலினம், இருப்பிட முகவரி, தொடர்பு எண்கள் உள்ளீடு செய்யப்படும்.அவர்கள் வீட்டை விட்டு வெளியேறினால், அவர்களின் முகவரி, மொபைல் போன் எண்ணுடன், போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட எஸ்,பி.,க்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறைகளுக்கு தகவல் சென்று விடும்; அவர்கள், அந்த நபரை மீட்டு விடுவர்.மேலும், இந்த செயலி வாயிலாக, 'டெலி மெடிசன்' எனும், மருத்துவ ஆலோசனை அளிக்கும் வசதியும் செய்ய உள்ளோம்.

வீடியோ கால்'ஆப்' வாயிலாக, தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுடன், ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை, டாக்டர்கள், வீடியோ காலில் பேசுவர். அவர்களின் உடல் நலத்தை தொடர்ந்து கண்காணிப்பர். தேவைப்படும் மருந்துகள், உடனடியாக அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். கொரோனா வைரஸ்க்கான பாதிப்பு இருப்பது தெரிய வந்தால், மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவர். இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE