பாரீஸ்: பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 1,427 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் மட்டும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது.
பிரான்ஸில் மார்ச் முதல் தேதியிலிருந்து ஏப்ரல் 7 வரை பலியானவார்கள் எண்ணிக்கை 10,328 ஆக உள்ளது. ஒரு லட்சத்து ஒன்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். கொரோனா வைரஸ் தாக்கத்தால் அதிகளவிலான உயிரிழப்புக்களை கொண்டிருந்த இத்தாலியில், சமீப நாட்களாக உயிரிழப்புக்கள் குறைந்துவரும் நிலையில், பிரான்ஸில் உயிரிழப்புக்கள் அதிகரித்து வருகின்றது. மார்ச் 15-ம் தேதியிலிருந்து நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்நிலையில், நேற்று (ஏப்., 7) முதல், மக்கள் காலை பத்து மணி முதல் இரவு 7 மணி வரை வெளியே தலைகாட்டக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களில், ஆபத்தை உணராமல் பலர் நகர பூங்காக்களில் கூட்டமாக வாக்கிங் மற்றும் ஜாகிங் செய்ததால், கட்டுப்பாட்டை இறுக்கியுள்ளது.

தினசரி இறப்புகள், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர், ஆபத்தான நிலையில் இருப்போர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருப்பதாகவும், இது இன்னும் உச்சநிலையை அடையவில்லை என்றும் அந்நாட்டின் சுகாதார இயக்குனர் சாலமன் கூறியுள்ளார். இதனால் ஏப்ரல் 15-க்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE