வாஷிங்டன்: கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து தினந்தோறும் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசி வரும் டிரம்ப், இன்றைய (ஏப்.,08) பேட்டியில், உலக சுகாதார அமைப்பு மற்றும் சீனா மீதான கோபத்தை மீண்டும் வெளிப்படுத்தினார்.
கொரோனா வைரஸ் அமெரிக்காவில் 12 ஆயிரம் பேரை பலி வாங்கியுள்ளது. இதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ளாமல், தொடர்ச்சியாக, சீனா, ஓபாமா நிர்வாகம், ஊடகங்கள், உலக சுகாதார நிறுவனம் போன்றவற்றை டிரம்ப் குறை சொல்லி வருகிறார். அவரது வர்த்தக ஆலோசகரான பீட்டர் நவரோ ஜனவரி 29-ம் தேதி, கொரோனா குறித்து எச்சரித்து குறிப்பாணை அனுப்பியது சமீபத்தில் தெரிய வந்தது. உலக சுகாதார அமைப்பும் அதே சமயத்தில் எச்சரித்திருந்தது. அப்போது கொரோனாவை சாதாரண காய்ச்சலுடன் டிரம்ப் ஒப்பிட்டார்.

இந்நிலையில், வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டிரம்ப், “உலக சுகாதார நிறுவனத்திடம் ஆரம்பத்திலேயே அதிகமான தகவல்கள் இருந்தன. ஆனால் அவர்கள் சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டனர். அவர்களது பல விஷயங்கள் தவறாக இருந்தன. பாதிப்பை முன்பே அவர்கள் அறிந்திருக்க வேண்டும். எனவே அவர்களுக்கான நிதியை நிறுத்தப் போகிறோம்.” என கூறி அதிர்ச்சி அளித்தார்.

தொற்று நோய் பாதிப்புக்கு நடுவே உலக சுகாதார நிறுவன நிதியை நிறுத்துவது அவசியமா? என டிரம்பிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். உடனடியாக தனது முடிவில் பின் வாங்கியவர். “ நான் நிதியை நிறுத்தப்போகிறேன் என கூறவில்லை. அது குறித்து விசாரிக்க போகிறோம். பல ஆண்டுகள் பின்நோக்கி பார்த்தால், அவர்கள் சீனா சார்பாகவே செயல்பட்டது தெரிகிறது. இது சரியில்லை.' என்றார்.
"கொரோனா வைரஸ் அமெரிக்காவில் மிகவும் கட்டுப்பாட்டில் உள்ளது. ஒரு நாள், இது ஒரு அதிசயம் போல மறைந்துவிடும்" என்று டிரம்ப் ட்வீட் செய்ததற்கு, ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு முன்னதாக, ஜனவரி 30 அன்று உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸை ஒரு பொது சுகாதார நெருக்கடி என அறிவித்தது. இறுதியாக மார்ச் 13-ல் தேசிய அவசரநிலையை டிரம்ப் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE