புதுடில்லி: ஊரடங்கை மேலும் 15 நாட்கள் நீடிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக, அத்யாவசியப் பொருட்கள் கிடைப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என மாநில தலைமை செயலாளர்களுக்கு உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார்.

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் இதுவரை 5000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 149 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வருவதால், அதனை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக, நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும், தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஊரடங்கு காலத்தை மேலும் அதிகப்படுத்த பல மாநிலங்கள் கோரிக்கை வைத்துள்ளதாகவும், அதனை ஏற்று ஊரடங்கினை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், அத்யாவசிய பொருட்கள் போதிய அளவு கிடைப்பதை உறுதி செய்யுமாறு அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், அத்யாவசிய பொருட்கள் சட்டம் 1955ஐ நடைமுறைப்படுத்துவதன் மூலம் உணவுப் பொருட்கள் பதுக்கினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். பதுக்கல் / கறுப்பு சந்தைப்படுத்துதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அத்தியாவசிய பொருட்கள் நியாயமான விலையில் பொதுமக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். உணவு பொருட்கள், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி, போக்குவரத்துக்கு தடையில்லை. இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு எடுத்து வரும் தொடர் நடவடிக்கையால், ஊரடங்கு ஏப்.,14க்கு பின்னரும் நீட்டிக்கப்படும் என கூறப்படுகிறது. இதுகுறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE