ஹாங்காங்: ஹாங்காங்கில் உள்ள ஓஷன் உயிரியல் பூங்கா கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக, மூடப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள பாண்டா ஜோடி ஒன்று பத்தாண்டுகளுக்கு பிறகு, முதல் முறையாக இயற்கையான முறையில் இனசேர்க்கையில் ஈடுபட்டது.

கொரோனா வைரஸ் மனித உயிர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அதே சமயம், நோய் பரவலை தடுக்க போடப்பட்டுள்ள ஊரடங்கு, போக்குவரத்து தடை போன்றவற்றால், நீர் நிலைகள், காற்றின் தரம், விலங்குகள் ஆகியவை புத்துணர்வு பெற்றுள்ளன. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஹாங்காங்கில் 936 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். நோயை கட்டுப்படுத்த ஏப்ரல் 23 வரை சமூக விலகலை கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்குள்ள ஓஷன் உயிரியல் பூங்கா ஜனவரி மாதம் மூடப்பட்டது. இந்த உயிரியல் பூங்காவிற்கு 2007-ம் ஆண்டு யிங் யிங் என்ற பெண் பாண்டாவும், லீ லீ என்ற ஆண் பாண்டாவும் கொண்டு வரப்பட்டது.

2010-ல் இந்த ஜோடியை ஒன்றிணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அது இன்று வரை பலனளிக்காமல் இருந்தது. இந்த நிலையில், அவை திங்களன்று காலை இயற்கையாக இணை சேர்ந்துள்ளது. உலக வன விலங்கு நிறுவன புள்ளிவிவரப்படி, 1,864 பாண்டா கரடிகள் மட்டுமே வனப்பகுதிகளில் உயிருடன் உள்ளன. அரிதான உயிரினமான பாண்டா கரடிகள், தற்போது இயற்கை முறையில் கருத்தரிக்க உள்ளது விலங்கு நல ஆர்வலர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. உயிரியல் பூங்கா நிர்வாகத்தினர், பெண் பாண்டாவான யிங் யிங்கின் நடத்தைகளை தொடர்ச்சியாக கவனித்து வருகின்றனர். பாண்டாக்களின் கர்ப்ப காலம் சராசரியாக 5 மாதங்கள் ஆகும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE