மும்பை : கொரோனா வைரசின் தாக்கத்தால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 1.6 சதவீதமாக வீழ்ச்சி அடையும் என அமெரிக்காவின் கோல்ட்மேன் சாஸ் பொருளாதார ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. கொரோனா தடுப்பு காரணமாக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. இதனால் நாட்டில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பால் நாட்டில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதித்துள்ளது. தற்போதைய நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் 1.6 சதவீதமாக மோசமாக வீழ்ச்சி அடைய வாய்ப்பு உள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஒன்று கணிப்பில் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவி்ன் கோல்ட்மேன் சாஸ் பொருளாதார ஆய்வு நிறுவனம் அறிக்கையில் கூறியதாவது : கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுக்குள் கொண்டு வர 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின் பொருளாதார வளர்ச்சி முடங்கியது. பொருளாதார சிக்கல்களை தீர்க்க அரசும் பல முயற்சிகள் செய்து வருகிறது. ஆயினும் பாதிப்புகள் குறைந்தபாடில்லை. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பொருளாதார வளர்ச்சி கடந்த நிதியாண்டில் 5 சதவீதமாக இருந்தது. இப்போது கொரோனா வைரஸ் காரணமாக பொருளாதார செயல்பாடுகள் முடங்கியதால் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும்.

கொரோனாவால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி முதல் காலாண்டில் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் என ஏற்கனவே பல்வேறு ஆய்வு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. நாங்கள் முதலில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2021-ம் நிதியாண்டில் 3.3 சதவீதம் வரை இருக்கும் என மார்ச் 22-ம் தேதி கணித்தோம். ஆனால், தொடர்ந்து நீடித்து வரும் சூழல்களைக் கணக்கிடும்போது, கடந்த 1970, 1980 களிலும், 2009-ம் ஆண்டிலும் ஏற்பட்ட பெரும் சரிவைப் போன்று இந்த ஆண்டு ஏற்பட்டு பொருளாதார வளர்ச்சி 1.6 சதவீதமாக வீழ்ச்சி அடையும்.

இதுவரை ரூ.1.75 லட்சம் கோடி நிதித்தொகுப்பும், ரிசர்வ் வங்கி 0.75 சதவீத வட்டிக்குறைப்பும் மட்டும் செய்து பொருளாதார வளர்ச்சி தூண்டப்பட்டதாக கூறப்படுகிறது. ஜிடிபியில் 60 சதவீதம் இருக்கும் மக்களின் நுகர்வு பழக்கம், சேவைத்துறை பாதிக்கப்பட்டுள்ளது. எங்களின் கணிப்பு நாட்டின் ஊரடங்கு காலங்களில் ஏற்படும் பொருளாதார பாதிப்புகளைப் பாதியளவு மட்டுமே கணித்துள்ளோம். இந்த சூழல் முடிந்து இயல்பு நிலை வரும்போது தான் பொருளாதார வளர்ச்சி குறித்து முழுமையாக தெரிவிக்க முடியும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE