ஜம்மு: காஷ்மரில் எல்லை தாண்டிய பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்ற ராணுவ வீரர்கள் 5 பேர் வீரமரணம் அடைந்தனர். அவர்கள் 5 பேரும் எப்படி இறந்தார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
காஷ்மீரின் குப்வாரா மலை பகுதியில், சிறப்பு கமாண்டோக்கள் குழுவினர் ஹெலிகாப்டரில் இறந்து இறங்கும் இந்த வீரர்களின் கடைசி புகைப்படமாக, மேலே காணும் புகைப்படம் அமைந்தது. இது எடுக்கப்பட்டது ஏப்.,4ம் தேதி மதியம் 12.45 மணிக்கு. இந்த வீரர்கள் கடந்த 2016ம் ஆண்டு நடந்த சர்ஜிகல் ஸ்டிரைக்கில் பங்கேற்றவர்கள்.
பயங்கரவாதிகள் இருக்கும் இடமாக சந்தேகித்த பகுதியில், சிறப்பு அதிரடிப்படையை சேர்ந்த கூடுதல் ராணுவ வீரர்கள் அடங்கிய இரு குழுவை ஹெலிகாப்டர் மூலம் இந்திய ராணுவம் கொண்டு சேர்த்தது. உறைபனியில் ஹெலிகாப்டரில் இருந்து குதித்த முதல் குழுவில் இருந்த வீரர்களில் சிலர் இடுப்பளவு பனிப்பாறையில் சிக்கி பின் மீண்டனர்.

மூடுபனியையும் பொருட்படுத்தாமல், தொடர்ந்து முன்னேறிய அவர்கள், பனிப்பாறையில் நின்று கண்காணித்த போது, பாறை உடைந்து கீழே விழுந்தது. அவர்கள் கீழே விழுந்த இடத்திற்கு அருகில் தான் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்தனர். தொடர்ந்து பயங்கரவாதிகளுடன் நேருக்கு நேர், மிக அருகில் ராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சண்டை நடத்தினர். துப்பாக்கி சத்தம் கேட்டு அடுத்த குழு வரும் முன், முதல் குழுவில் இருந்த 5 வீரர்களும், பயங்கரவாதிகளை கொன்று வீரமரணம் அடைந்திருந்தனர்.
அவர்கள் உடல்கள் அனைத்தும் பயங்கரவாதிகளுக்கு மிக அருகே இருந்தது. அதில் ஒரு வீரரின் உடல், பயங்கரவாதி ஒருவனின் மேல் இருந்துள்ளது. இந்த என்கவுன்டர் காஷ்மீரில் சமீப காலத்தில் நடந்த மிக பயங்கரமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. வீரமரணம் அடைந்தவர்கள் ஹவில்தார் தேவேந்திர சிங், சப் சஞ்சீவ் குமார் மற்றும் சிப்பாய்கள் பால கிருஷ்ணன், அமித் குமார், சத்ரபால் சிங் ஆகிய 5 பேரின் உடல்களும், ராணுவ மரியாதையுடன் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டது.