சமூக நெருக்கடி! நாட்டின் நிலைமை குறித்து மோடி உரை; ஊரடங்கை நீட்டிக்க கோரிக்கை வலுப்பதாக பேச்சு| PM Modi hints at lockdown extension | Dinamalar

பொது செய்தி

இந்தியா

'சமூக நெருக்கடி!' நாட்டின் நிலைமை குறித்து மோடி உரை; ஊரடங்கை நீட்டிக்க கோரிக்கை வலுப்பதாக பேச்சு

Updated : ஏப் 09, 2020 | Added : ஏப் 09, 2020 | கருத்துகள் (36)
Share
புதுடில்லி: ''நாட்டில், சமூக நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மக்களின் உயிரையும், வாழ்வையும் காப்பாற்றுவது தான், அரசுக்கு முக்கியமான பணியாக இருக்கிறது. இந்நிலையில், நாம் விழிப்புடன் இருப்பது அவசியம்,'' என, பிரதமர், மோடி, பல்வேறு கட்சித் தலைவர்களுடன், நேற்று நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பேசினார். சீனாவில்
Coronavirus, Corona, COVID-19, Curfew, PM Modi, Prime Minister, Modi, Narendra Modi, Lockdown extension, Opposition leaders, Politics, Opposition, Lockdown, Political parties, கொரோனா, தடுப்பு , ஊரடங்கு, நீட்டிக்க, மோடி, சமூக நெருக்கடி, அமைச்சர்கள், ஆலோசனை, தொற்று

புதுடில்லி: ''நாட்டில், சமூக நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மக்களின் உயிரையும், வாழ்வையும் காப்பாற்றுவது தான், அரசுக்கு முக்கியமான பணியாக இருக்கிறது. இந்நிலையில், நாம் விழிப்புடன் இருப்பது அவசியம்,'' என, பிரதமர், மோடி, பல்வேறு கட்சித் தலைவர்களுடன், நேற்று நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பேசினார்.

சீனாவில் பிறந்த கொரோனா வைரஸ், இப்போது, உலகம் முழுதும் பரவியுள்ளது. இந்த நோய் தொற்று, இந்தியாவில் கடந்த மாதம், முதல் வாரத்தில் பரவ ஆரம்பித்தது. இதையடுத்து, 22ம் தேதி, 14 மணி நேரம், 'மக்கள் ஊரடங்கு' கடைப்பிடிக்கப்பட்டது.


அதிகரிப்பு:

நோய் பரவல் அதிகமானதையடுத்து, 25ம் தேதி முதல், 21 நாட்களுக்கு, நாடு முழுதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும், கடந்த சில நாட்களாக, நாடு முழுதும், வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, நாள் ஒன்றுக்கு, 500 வீதம் அதிகரித்து வருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 5,000த்தைக் கடந்து விட்டது; 150க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்.

இதையடுத்து, 'ஊரடங்கை மேலும், 15 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும்' என, மஹாராஷ்டிரா, தெலுங்கானா, டில்லி உட்பட, பல மாநிலங்கள், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின், மாநில முதல்வர்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக, பிரதமர், மோடி பேசினார். பின், காங்கிரஸ் தலைவர், சோனியா, திரிணமுல் காங்., தலைவர், மம்தா, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் ஆகியோருடன், வைரஸ் பரவல் பற்றி தொலைபேசியில் பேசினார்.


ஆலோசனை:

முன்னாள் ஜனாதிபதிகள், பிரதிபா பாட்டீல், பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர்கள், தேவ கவுடா, மன்மோகன் சிங் ஆகியோருடனும் பேசினார். இந்நிலையில், வைரஸ் பரவல் தொடர்பாக, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களுடன், பிரதமர் மோடி, நேற்று வீடியோ கான்பரன்ஸ் வழியாக ஆலோசனை நடத்தினார். லோக்சபா மற்றும் ராஜ்யசபாவை சேர்த்து, ஐந்து எம்.பி.,க்களுக்கு மேல் உள்ள கட்சிகளுக்கு கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

இதில், காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவருமான குலாம் நபி ஆசாத், தேசியவாத காங்., தலைவர், சரத் பவார், சமாஜ்வாதி கட்சியின் ராம் கோபால் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சியின் சதீஷ் மிஸ்ரா ஆகியோர் பங்கேற்றனர். மேலும், லோக் ஜனசக்தியின் சிராக் பஸ்வான், அகாலி தளத்தின் சுக்பீர் சிங் பாதல், ஐக்கிய ஜனதா தளத்தின் ராஜிவ் ரஞ்சன் சிங், பிஜு ஜனதாதளத்தின் பினாகி மிஸ்ரா, சிவசேனாவின் சஞ்சய் ராவூத், தி.மு.க.,வின், டி.ஆர்.பாலு உட்பட, பலர் பங்கேற்றனர்.


ஒத்துழைப்பு:

ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க, திரிணமுல் காங்., முதலில் தயக்கம் காட்டியது. பின் அதன் மூத்த தலைவர், சுதீப் பண்டோபாத்யாய் பங்கேற்றார். கூட்டத்தில், வைரஸ் பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில், ஒத்துழைப்பு மற்றும் ஆலோசனைகளை, கட்சி தலைவர்களிடம் மோடி கோரினார். மேலும், ஊரடங்கு மற்றும் பொருளாதார இழப்புகளை சரி செய்வது பற்றியும், அவர்களுடன் பிரதமர் ஆலோசித்தார்.

கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது: நாட்டில் இப்போது, சமூக நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டு மக்கள் அனைவரின் உயிரையும், வாழ்வையும் காப்பாற்றுவது தான், அரசுக்கு முக்கிய பணியாக இருக்கிறது. நாம் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என, பல்வேறு மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன. இது பற்றி, விரைவில் முடிவெடுக்கப்படும். இவ்வாறு, அவர் பேசினார். கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் பலரும், 'சுகாதார ஊழியர்களுக்கு, போதுமான பாதுகாப்பு சாதனங்கள் இல்லை' என, தெரிவித்தனர். 'நாடு இப்போதுள்ள நிலையில், புதிய பார்லி., கட்டடம் கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும்' என, சிலர் கூறினர்.

கூட்டத்தில் பங்கேற்றவர்களிடம், உள்துறை, சுகாதாரம், கிராம மேம்பாடு உட்பட பல்வேறு துறைகளின் செயலர்கள், தொற்று நோய் பரவலை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி தெரிவித்தனர்.


'விவசாயிகளுக்கு விலக்கு!'

கூட்டத்துக்கு பின், லோக்சபா காங்கிரஸ் தலைவர், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியதாவது: தொற்று நோய் பரவல் அதிகரித்துள்ளதால், ஊரடங்கை, மத்திய அரசு மேலும் நீட்டிக்கும் என, தெரிகிறது. பிரதமர் நடத்திய கூட்டத்தில், காங்., சார்பில் சில ஆலோசனைகள் முன் வைக்கப்பட்டன.

ஊரடங்கிலிருந்து, விவசாயிகளுக்கு விலக்கு அளித்து, அவர்களை, பயிர்களை அறுவடை செய்ய அனுமதிக்க வேண்டும் என, காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது. மேலும், உரங்கள் மீதான வரிகள் அனைத்தும் ரத்து செய்ய வேண்டும் என, தெரிவித்தோம். அறுவடைப் பணியில், மஹாத்மா காந்தி தேசிய கிராம வேலை உறுதித்திட்டத்தில், பதிவு செய்துள்ளவர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் என, கேட்டுக் கொண்டோம். இவ்வாறு, அவர் கூறினார்.


'தொகுதி நிதி ரத்து கூடாது!'

திரிணமுல் காங்., மூத்த தலைவர், சுதீப் பண்டோபாத்யாய் கூறியதாவது:கொரோனாவால் ஏற்பட்டுள்ள நிலைமையை சமாளிக்க, எம்.பி.,க்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவு தவறு. இதனால், தொகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் கடுமையாக பாதிக்கும்.

அதற்குப் பதில், எங்களின் முழு சம்பளத்தையும் தருவதற்கு தயாராக உள்ளோம். தொற்று நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக, மேற்கு வங்கத்துக்கு, கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.


'சர்ச்சையில் சிக்க வைக்க சதி!'

''என்னை சர்ச்சையில் சிக்க வைக்க சதி நடப்பதாக தோன்றுகிறது,'' என, பிரதமர் மோடி, டுவிட்டரில் கூறியுள்ளார்.

'நாட்டுக்காக, தன்னலம் கருதாது சேவை செய்து வரும், பிரதமர், மோடியை கவுரவிக்க, வரும் ஞாயிறன்று, மாலை, 5:00 மணிக்கு, அனைவரும் ஐந்து நிமிடங்கள் எழுந்து நிற்க வேண்டும்' என, சமூக வலைதளங்களில், நேற்று மாலை தகவல் பரவியது. இதை மறுத்து, பிரதமர் மோடி, 'டுவிட்டரில்' பதிவிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

இதை பார்க்கும்போது, என்னை சர்ச்சையில் சிக்க வைக்க, என் பெயரை பயன்படுத்தி, சதி நடப்பதாகத் தோன்றுகிறது. யாராவது, என்மீது உள்ள அபிமானத்தில் கூட, இதை செய்திருக்கலாம். உண்மையிலேயே, என் மீது அன்பும், எனக்கு மரியாதை செய்ய வேண்டும் என்ற எண்ணமும் இருந்தால், ஓர் ஏழைக் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள். இதைவிட, எனக்கு பெரிய மரியாதை எதுவும் இல்லை. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

மேலும், 'ஆரோக்கிய சேது என்ற மொபைல் ஆப், கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்த்து போராட துவக்கப்பட்டுள்ள முக்கிய நடவடிக்கை. இதில், பல முக்கிய தகவல்கள் உள்ளன. மக்கள் அதிகம் பயன்படுத்தும் போது, இதன் பயன்பாடு, மிகச் சிறப்பாக அமையும்' என, இன்னொரு டுவிட்டர் பதிவில் மோடி கூறியுள்ளார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X