லண்டன்: இங்கிலாந்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வீடுகளில் முடங்கியுள்ள மாணவர்களுக்கு, ஆசிரியர் ஒருவர் தினமும் 8 கி.மீ நடந்து சென்று உணவு வினியோகம் செய்து வருகிறார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இங்கிலாந்து முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கை தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டதால், மாணவர்கள் வீடுகளுக்குள் தஞ்மடைந்துள்ளனர். இங்கிலாந்தின் கிரிம்ஸ்பி நகரில் உள்ள வெஸ்டர்ன் பிரைமரி பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஜேன் பவல்ஸ். இவர் இலவச மதிய உணவு திட்டத்தின் கீழ் தனது பள்ளியில் பயிலும் 80 மாணவ, மாணவியர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று உணவு அளித்து வருகிறார். மாணவர்கள் யாரும் பசியால் தவிக்க கூடாது என்பதற்காக பள்ளி மூடப்பட்டதில் இருந்து சீஸ் பன், பழங்கள், பிஸ்கட் உள்ளிட்டவை அடங்கிய உணவு பைகளை வினியோகித்து வருகிறார். பவல்ஸின் சேவையை பெற்றோர்கள், 'நீங்கள் ஹீரோ' என மனமார பாராட்டி வருகின்றனர்.
மக்களின் பாராட்டு குறித்து பவல்ஸ், ' நான் என்னுடைய பணியை தான் செய்கிறேன். என்னுடைய வேலையின் ஒரு பகுதி தான் இது. உண்மையில் இது போன்று நடக்குமென நினைக்கவில்லை' என்கிறார்.

பள்ளியில் இருந்து மிகப்பெரிய பையில் உணவு பைகளை சுமந்து 8 கி.மீ தொலைவுக்கு உணவுகளை வினியோகம் செய்து விட்டு, காலி பைகளுடன், முகத்தில் மகிழ்ச்சியுடன் மீண்டும் பள்ளிக்கு திரும்பும் ஜேன் பவல்ஸின் சேவைக்கு பாராட்டுகள் குவிகிறது.