உடல் கூறு ஆய்வு தெரிவிக்கும் ஒரு உண்மை, நம் உடலைத் தாக்கும் ஒவ்வொரு கிருமிக்கும், எதிரடியாக செயல்பட்டு, அவற்றை அழிக்கும் சக்தி, நம் உடலிலேயே இருக்கிறது. தடுப்பு ஊசி என்பது, அந்த குறிப்பிட்ட நோய்க்கிருமியை அழிக்கும் எதிர்ப்பு சக்தியை தயார்படுத்தி, வலுவடைந்த நிலையில் வைப்பது தான்.பழக்கவழக்கம்நம் உணவுப் பழக்கமும், உடலைப் பராமரிக்கும் முறையும் சரியாக இருந்தால், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி, சரியாக, குறித்த நேரத்தில், உடலைத் தாக்கும் கிருமிகளைத் தாக்கி, அழித்து, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
நம் உடலுக்குள் நடக்கும் இந்த போராட்டம், ஆரோக்கியமான உடல் உள்ளவர்களுக்கு பெரும்பாலும் தெரியாது. பலவீனமானவர்களுக்கு அந்த போராட்டம், காய்ச்சல், தலைவலி மற்றும் தொடர்புடைய பாகங்களில் ஏற்படும் வலிகள் மூலமாக வெளிப்படும்.அதனால் தான், உடல் பராமரிப்புக்கும், உணவுப் பழக்க வழக்கங்களுக்கும் மிக முக்கியத்துவம் கொடுப்பது அவசியமாகிறது.சற்றும் எதிர்பாராமல் வந்த, இந்த கொரோனா வைரஸ், நம் கலாசாரம் மற்றும் நடைமுறைகள் எப்படி நம்மை சீரழித்து வைத்திருக்கிறது என்பதை உணர்த்திக் கொண்டிருக்கிறது. நம் முன்னோர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு, மேற்கத்திய கலாசாரத்தின் ஊடுருவலால், அப்புறப்படுத்தப்பட்ட பழக்கவழக்கங்களை, கொரோனாவின் தாக்குதல் நமக்கு நினைவூட்டியிருக்கிறது.
இப்படி, நமக்கு, சமூக பண்பாட்டை அடையாளம் காட்டியுள்ள கொரோனா செய்த மிகப் பெரிய காரியம், நம் தமிழக அரசு மற்றும் அதிகாரிகளிடம் ஒளிந்திருந்த அல்லது பயன்படுத்தப்படாமல் இருந்த திறமைகளை, வெளிக்கொண்டு வந்திருக்கிறது.மிகச் சாதாரணமாக, தங்கள் பொறுப்பைத் தட்டிக்கழித்து, பதவி என்ற பட்டயத்தை மட்டுமே சுமந்து, திரிந்து கொண்டிருந்த அத்தனை பேரையும் களத்தில் இறக்கி, கண்ணுக்குத் தெரியாத கிருமியைச் சுமந்து வந்த ஒவ்வொருவரையும் அடையாளம் கண்டு, தனிமைப்படுத்தி, பொதுமக்களிடையே பரவாமல், பாதுகாக்கும் பணி சாதாரணமானது அல்ல. அதற்கு, அவர்களது அறிவும், திறமையும், உடல் உழைப்பும், எத்தனை சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும் என்பது, கற்பனைக்கும் எட்டாத ஒரு உண்மை நிகழ்வு.ஒருமைப்பாடுபிரதமரின் வேண்டுகோளை ஏற்று பணியாற்றிய, அரசு ஊழியர்களும், அவர்களை, நல்ல வகையில் செயல்பட வைக்க திட்டம் வகுத்துக் கொடுத்த அதிகாரிகளும், அதை பாராட்டி நன்றி தெரிவித்த மக்களும்.
காட்சிக்கு வைக்கப்பட்ட மாதிரி நிகழ்வாக இல்லாமல், நிரந்தர நிகழ்வாக இருந்தால் எப்படியிருக்கும் என்று, ஒவ்வொரு தனி மனிதனும் எண்ணிப் பார்க்க வேண்டும்.ஒருவர் மீது ஒருவர் பழியைப் போட்டு, தப்பித்துக் கொள்ளும் கண்ணாமூச்சி விளையாட்டு நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த சமுதாயத்தில், ஒன்று கூடித் தேர் இழுக்கும் ஒருமைப்பாடும் இருக்கிறது என்பதை, இன்று உணர்த்தி இருக்கிறோம்.பாராட்டுஊடக செய்தி சேகரிப்பாளர்கள், 'மைக்'கை நீட்டி, கேள்வி கேட்டாலே, நின்று பதில் சொல்லாமல் ஓடிய அமைச்சர்களும், அதிகாரிகளும், பொறுமையாக அமர்ந்து, அமைதியாக, அத்தனை கேள்விகளுக்கும், சிறிதும் மழுப்பல் இல்லாமல், பதில் சொன்ன திறமை, இத்தனை நாள் எங்கு ஒளிந்திருந்தது?
மக்களின் தேவையற்ற அச்சத்தைப் போக்கும் அதே நேரத்தில், தேவையான எச்சரிக்கை செயல்பாட்டிலிருந்தும் நழுவ விடக்கூடாது என்ற நோக்கத்துடன் மிகக் கவனமாக, பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்த, சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அத்துறை செயலரின் பொறுப்பான நடவடிக்கையை, நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பாராட்டி கொண்டிருக்கின்றனர்.இது, இதுநாள் வரை நமக்கு காண கிடைக்காத ஒரு நிகழ்வு.வைரஸ் தாக்குதல் காரணமாக எழுந்துள்ள அச்சம், விரைவிலேயே மறைய வேண்டும் என்று எண்ணும் அதே நேரத்தில், நம் அரசின், அரசு அதிகாரிகளின் இந்த செயல்திறன் தொடர வேண்டும் என்ற ஆசை, ஒவ்வொரு குடிமகன் மனதிலும் தோன்றியிருக்கிறது;
சமூக ஊடகங்களில் அது பிரதிபலிக்கிறது.அரசின் அனைத்து பணிகளையும் விமர்சிப்பதும், குறை கூறுவதும் மட்டுமே தங்களின் தலையாய பணி என்று உறுதியோடு இருக்கும் எதிர்க்கட்சியினரைக் கூட, தங்களின் நிலையிலிருந்து முற்றிலுமாக இறங்கி வந்து, பாராட்ட வைத்து விட்டது, அதிகாரிகளின் சிறப்பான பணி.ஒரு எதிர்க்கட்சித் தலைவர், காவல் துறையை பாராட்டுவது முன் எப்போதும் நாம் கண்டிராத, ஏன், நினைத்துக் கூடப் பார்க்காத ஒரு நிகழ்வு.லத்தியை துாக்கினாலே, 'சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்ட காவல் துறை ஒழிக...' என்று கோஷம் போட்ட சமூக ஆர்வலர்கள் கூட, அடித்ததை அவசியம் என்று ஒப்புக் கொண்டு விட்டனர்.கடுமையாக பேசுவது தவிர்க்க முடியாத ஒன்று. அது ஒன்று தான், மக்களை நம் கட்டுக்குள் வைத்திருக்க ஒரே வழி என்று, அசைக்க முடியாத கொள்கையில் இருந்த காவலர்களும், அதிகாரிகளும்.
அவர்களின் அன்பான வேண்டுகோளும், அவர்களை அடிபணிய வைக்கும் என்று நிரூபித்துக் காட்டி விட்டனர்.இதில் விதிவிலக்காக, சில அதிகாரிகள் நடந்து கொண்டனர் என்பதையும் ஒப்புக் கொள்ளவே வேண்டும். அவர்கள் தவறாக இந்த துறையில் நுழைந்து, அதன் பெருமையைப் பாழ்படுத்திக் கொண்டிருப்போர் என்பதால், அவர்களை இந்த தருணத்தில், கண்டுகொள்ளாமல் புறக்கணிப்பது தான், நல்ல அதிகாரிகளுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன். 'தனி ஒருவனுக்கு உணவில்லை எனில், இந்த ஜகத்தினை அழித்திடுவோம்' என்று கடுமையாக சாடிய, பாரதியின் வார்த்தைகளை, தங்கள் நினைவில் நிறுத்தி, வைரஸ் நோயால் ஏற்படும் இறப்பைப் போக்குகிறோம் என்ற பெயரில், பசியால் இறப்பு ஏற்பட வழி வகுத்து விடக் கூடாது என்பதில், மத்திய மற்றும் மாநில அரசுகள் முனைப்புடன் செயல்பட்டதையும் பார்க்க முடிந்தது.
ரேஷன் பொருட்கள், வீடு தேடி, உதவித்தொகையுடன் வந்ததும், 'அம்மா' உணவகம் நேர கட்டுப்பாடின்றி, உணவு வழங்கியதும் மிகுந்த பாராட்டுக்குரிய சேவை.ஒரு பொருள் கிடைப்பது தடைபடும் என்று தெரிய வந்தாலோ அல்லது அறிவிக்கப்பட்டாலோ, தேவைப்படாதவர்களும் கூட, எதற்கும் இருக்கட்டும் என்று தேவைக்கு அதிகமாகவே சேமித்து வைக்க முயல்வர். போட்டி போட்டு, விற்பனையாகும் இடத்தில் முண்டியடித்து வாங்க முயல்வர். இது, நம் மக்களின் வாடிக்கையாகி விட்டது. உடற்பயிற்சி தண்டனைஅதனால், தேவையானவர்களுக்கு தேவையான அளவு கூட கிடைக்காமல், தேவையற்றவர்களிடம் வீணாகக் குவிந்து கிடக்கும் நிலையை ஏற்படுத்துகின்றனர்.
ஆள் நடமாட்டமில்லாத, சிறிதளவு ஆரவாரம் கூட இல்லாத, சென்னை மாநகர பிரதான சாலைகளும், தெருக்களும், காணக் கிடைக்காத காட்சி தான். ஆனால், அது ஏற்பட்டுள்ள சூழ்நிலையை கருதி, தங்களின் ஆவலை அடக்கி, காட்சி ஊடகங்களின் வாயிலாகக் கண்டு, மகிழ்வதோடு நிறுத்திக் கொள்ளலாம். மாறாக, சிறு பிள்ளைத்தனமாக, இரு சக்கர வாகனங்களில் வலம் வந்த இளைஞர்கள் தான், காவல் துறையினரின் புதுமையான உடற்பயிற்சி தண்டனைகளுக்கு ஆளாகினர்.சம்பிரதாயம்இவற்றை கூட, அவமதிப்பாக எடுத்துக் கொள்ளாமல், நகைச்சுவையாகவும், கேலியாகவும் சமூக ஊடகங்களில் பரிமாறிக் கொண்ட விதமும், கொரோனா நிகழ்த்திய ஒரு புதுமை விளையாட்டு தான்.சாதாரணமாக, 'ஜலதோஷம் பிடித்திருக்கிறது' என்று நண்பர்களிடம், பேச்சு வாக்கில் சொன்னால், தங்களுக்கு தெரிந்த சிகிச்சையைச் சொல்லி, அக்கறையை வெளிப்படுத்துவது ஒரு சம்பிரதாயம்.
நாட்டு மக்களுக்கே அந்த நிலைமை ஏற்பட்டு விட்டதால், சமூக ஊடகங்களில் வைத்திய யோசனைகள் குவிந்து விட்டன.கடைகளில், கபசுர குடிநீர், வாதசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர், வெற்றிலை, மிளகு, சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை, கிராம்பு, உப்பு, மஞ்சள் பொடி, இவை எல்லாம் விற்றுத் தீர்ந்து விட்டன.இறை நம்பிக்கை காரணமாக, அது எந்த மதமாக இருந்தாலும், தனி மனித ஒழுக்கம் என்ற பெயரில், கட்டுப்பாடாக ஒரு வரையரைக்குள் வைத்துக் கொண்டவர்கள், துாய்மையான பழக்க வழக்கங்களை அனுசரித்து வந்தவர்கள் நிச்சயமாக தன்னைக் காத்துக் கொண்டிருக்க வாய்ப்பு அதிகம். விலகியிருப்பதும், வீட்டிலிருப்பதும், விழிப்புடனிருப்பதும் அவர்களுக்கு மிகவும் சுலபம்.கொரோனா நோய் பரவாமல் தடுப்பது ஒன்று தான், மனித உயிர்களைப் பேரழிவிலிருந்து காப்பாற்றும் ஒரே வழி.
அதற்கு தற்போது, நம் முன் இருக்கும் செயல்முறை, தனிமைப்படுத்துதல் அல்லது சமூக விலகல் என்பது தான். அரசு அதற்கு, தன் அதிகாரத்தை வைத்து, மக்களைக் கட்டுக்குள் வைத்து விட்டு, அதிகாரிகள் துணையோடு, நோயை வெளியிலிருந்து சுமந்து வந்தவர்களைக் கண்டறிந்து, தனிமைப்படுத்தி, சிகிச்சையளிக்கிறது.அவர்களுடன் தொடர்பில் இருந்ததால், தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பவர்களையும் கண்காணிக்கும் பணியிலும் ஈடுபட்டு உள்ளது. இது மிகச் சரியான, சிறந்த பயனைத் தரக் கூடிய முயற்சி; மேலும், மிகச் சிரமமான முயற்சியும் கூட. நல்ல பலன்இதற்கு, மக்கள் உரிய முறையில், அரசுக்கும், அதிகாரிகளுக்கும் ஒத்துழைத்தால், அவர்களது பணி மிகச் சிறப்பாக நடந்து, நல்ல பலனைத் தரும்;
மனித உயிர்கள் பேரழிவிலிருந்து காப்பாற்றப்படும்.தனக்கு நோய் தொற்று வர வாய்ப்புள்ளது என்று கருதுபவர்கள் அல்லது அப்படிப்பட்டவர்கள் பற்றிய தகவல் தெரிந்தவர்கள், அரசுக்கு தெரிவிப்பதும், மற்றவர்கள் தங்களைத் தனிமைப்படுத்தி, வீட்டிலேயே இருப்பதும், விலகி இருப்பதும், விழிப்புடனிருப்பதும் தான், இந்த தருணத்தில் நாம் ஆற்ற வேண்டிய மிகப்பெரிய கடமை.தொடர்புக்கு:இ - மெயில்: spkaruna@gmail.comஅலைபேசி: 98404 88111மா.கருணாநிதிகாவல் துறை கண்காணிப்பாளர்,- ஓய்வு
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE