புதுடில்லி: கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக, இந்தியா ஆர்டர் செய்திருந்த 5.5 லட்சம் ஆன்டிபாடி கருவிகளையும், 1 லட்சம் ஆர்.என்.ஏ பிரித்தெடுக்கும் கருவிகளையும் நேற்றிரவு (ஏப்.,15) சீனா அனுப்பி வைத்துள்ளதாகவும், அவை இன்று இந்தியா வந்தடையும் என மத்திய வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் கொரோனா வைரஸ் எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்துள்ளது. உயிரிழப்புகள் 400-ஐ தாண்டி விட்டது. பரிசோதனைகளை அதிகப்படுத்துவது தான் நோயைக் கண்டறிந்து கட்டுக்குள் வைக்க உதவும் என நிபுணர்கள் கூறி வருகின்றனர். தற்போது இந்தியாவில் தனியார் துறையையும் சேர்த்து 258 ஆய்வகங்கள் உள்ளன. கடந்த 2 நாட்களில் மட்டும் 22 ஆய்வகங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 26,351 மாதிரிகளை புதன்கிழமை ஒரே நாளில் பிராஸஸ் செய்துள்ளனர். வைரஸ் பரவலை பெருமளவு கட்டுப்படுத்தியுள்ள தென் கொரியாவில், ஒரு நாளைக்கு 15 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதே போல் ஜெர்மனியில் ஒரு நாளைக்கு 12 ஆயிரம் பரிசோதனைகள் நடந்துள்ளன.

இந்த நிலையில் தான், இந்தியாவும் பரிசோதனைகளை அதிகப்படுத்த சீனாவிலிருந்து மருத்துவ உபகரணங்கள், பொது மருந்துகள், பரிசோதனை கருவிகளை பெற ஒப்பந்தம் போட்டிருந்தது. இதனை வெளியுறவு அமைச்சகம் ஒருங்கிணைக்கிறது. குவாங்சோ வான்ட்போ நிறுவனத்திடமிருந்து 3 லட்சம் ஆன்டிபாடி கருவிகளையும், ஜுஹை லிவ்சான் நிறுவனத்திடமிருந்து 2.5 லட்சம் கருவிகளையும், எம்.ஜி.ஐ சென்ஷென் நிறுவனத்திடமிருந்து ஒரு லட்சம் ஆர்என்ஏ பிரித்தெடுக்கும் கருவிகளையும் இந்தியா வாங்கியுள்ளது. இவை இன்று மாலை இந்தியா வந்து சேர்ந்துவிடும்.

ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு 2 வாரங்களுக்கு மேல் ஆகியிருந்தால், ஆன்டிபாடி கருவிகள் மூலம் ரத்த பரிசோதனை செய்து 20 நிமிடத்தில் கொரோனா வைரஸ் உள்ளதா என்பதை கண்டறியலாம். மேலும் சீன நிறுவனங்களிடமிருந்து பாதுகாப்பு உடைகள், வென்டிலேட்டர்கள் மற்றும் சோதனைக் கருவிகள் போன்றவற்றை தர சோதனை செய்து, விரைவாக ஏற்றுமதி செய்யுமாறு இந்தியா கேட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE