இஸ்லாமாபாத் : முஸ்லிம்களின், புனித ரம்ஜான் நோன்பு சில நாட்களில் துவங்க இருப்பதால்,'கொரோனா' வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, பாகிஸ்தானின் அதிகாரமிக்க குழுவிடம், பிரதமர் இம்ரான் கான் கேட்டுக்கொண்டார்.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால், பாகிஸ்தானில் பாதிக்கப் பட்டோரின் மொத்த எண்ணிக்கை, 7,000ஐ தாண்டி இருக்கிறது.பலி எண்ணிக்கை, 135 ஆக அதிகரித்துள்ளது. 1,765 பேர், சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், முஸ்லிம்களின் புனித ரம்ஜான் நோன்பு, வரும், 23ம் தேதி தொடங்குகிறது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பாகிஸ்தானில், அந்த மாதம் முழுதும் சிறப்பு தொழுகைகள் நடைபெறும்.

இதையடுத்து, என்.சி.ஓ.சி., எனப்படும்,தேசிய கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மைய அதிகாரிகளுடன், பிரதமர் இம்ரான் கான் நேற்று ஆலோசனை நடத்தினார்.நோன்பு கடைப்பிடிக்கப்படும் மாதம் முழுதும், வைரஸ் பரவலை தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என, இம்ரான் கான், அவர்களுக்கு அறிவுறுத்தினார்.இதற்கிடையே, வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் இருந்தபடியே, தொழுகை நடத்துமாறு, பாக்., அரசு மக்களை அறிவுறுத்தியுள்ளது.சிந்து மாகாணத்தில், பகல், 12:00 மணி முதல், 3:00 மணிவரை, மக்கள் வெளியே வர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுஉள்ளன.அரசு இப்படி பலநடவடிக்கைகளை எடுத்தாலும், வைரசின் தாக்கம், இங்கு குறைந்ததாகதெரியவில்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE