இந்த, 2020ம் ஆண்டு, இப்படி ஒரு பேரிடருடன், உலகையே உலுக்கி எடுக்கும்; உலக மக்கள் அனைவருக்கும் மறக்க முடியாத ஆண்டாக அமையும் என, நாம் யாரும் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டோம்.'கொரோனா' என்ற, கண்ணுக்குப் புலனாகாத ஒரு வைரசின் தாக்கத்தால், உலகமே ஸ்தம்பித்துப் போய் கிடக்கிறது. ஆயிரக்கணக்கான மனித உயிர்களை பலி வாங்கி வரும், அந்த வைரசை கட்டுப்படுத்தும் வழி தெரியாமல், வல்லரசுகளும் விழிபிதுங்கி நிற்கின்றன.
சுய சுகாதாரம்
இந்த நிலையில், சுய சுகாதாரம் பேணவும், வீட்டிற்குள்ளே இருக்கவும், மத்திய - மாநில அரசுகள் வலியுறுத்துகின்றன. இதையே தான், நம் வீட்டு பெரியவர்கள், முன்பே சொல்லிக் கொடுத்துள்ளனர்; செய்தும் காட்டியுள்ளனர்.அன்று, ஆன்மிக வழியில், கடவுளின் பெயரால், பல நல்ல பழக்கவழக்கங்கள் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டன. 'தீட்டு, எச்சில் போன்ற கட்டுகளை மீறி, சில செயல்களை செய்தால், தெய்வ குற்றமாகி விடும்' என்று மக்கள் அச்சப்பட்டனர். காலப்போக்கில், அரசியல் மாற்றத்தாலும், மேற்கத்திய கலாசாரம், நாகரிகம் பரவத் தொடங்கியதாலும், நம் கலாசாரம் கேலிக்குரியதாக ஆக்கப்பட்டது.
ஆனால், தற்போது விஞ்ஞானம் அதையே, 'பாக்டீரியா, வைரஸ்' தொற்று என்ற பெயரில், உயிர் பயத்தை உண்டாக்கி, நம் பழம்பெருமையை நமக்கு மீணடும் புரிய வைத்துள்ளது.ஜப்பான் நாட்டில், இந்த வைரஸ் தாக்கத்தின் வேகம், குறைவாக இருப்பதற்கு, அந்நாட்டு மக்கள், எப்போதுமே கடைபிடித்து வந்த துாய்மை நடவடிக்கைகளும், ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. குனிந்து வணக்கம் சொல்லும் அவர்களின் கலாசாரமும், பொது இடங்களில் சமூக இடைவெளியையும், சுத்தத்தையும் எப்போதுமே கடைப்பிடிக்கும் நல்ல பண்பும், இனியாவது நாம் அனைவரும் பின்பற்ற வேண்டியவை. காலத்தின் கட்டாயமும் அவை.
ஜப்பானியர்களிடம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், அவர்களின் தனிமனித ஒழுக்கமும், சுயகட்டுப்பாடுமே. இங்கு, சமூக இடைவெளியை பின்பற்றுவதற்குக் கூட, கட்டம் போட்டு நிற்கச் சொல்ல வேண்டியுள்ளது. அரசு அதிகாரிகளும், போலீஸ்காரர்களும் வந்து, வட்டமும், கட்டமும் போட்டால் தான் நமக்குப் புரியுமா?ஒவ்வொரு தனிமனிதனுக்கும், எல்லா விஷயத்திலும், சமூக பொறுப்புணர்வு வேண்டும். அதுவும், உயிர்க்கொல்லி வைரசால், தொற்று நோய் தீவிரமாக பரவும் போது, அதிக முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது, மிக மிக அவசியமல்லவா!வளர்ந்த நாடுகளிலும் கூட, அதிக உயிர்களை பலி கொண்டு வரும் ஒரு நோய், நம்மை தாக்காமல் இருக்கத் தான் அரசும், டாக்டர்களும், துாய்மை காவலர்களும் போராடி வருகின்றனர் என்ற எண்ணம் சிலருக்கு இல்லை.
விளம்பரங்கள்
'அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் வருவோரை தவிர்த்து, பொதுவாக, வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்' என்பதற்குக் கூட, எவ்வளவு விளம்பரங்கள் செய்ய வேண்டியுள்ளது; பிரதமர், முதல்வர், டாக்டர்கள் போன்றோர், எவ்வளவு கெஞ்ச வேண்டியுள்ளது.இதற்கு காரணம், நோய் பற்றிய சரியான புரிதலோ, பயமோ சிலரிடம் இல்லை என்பது தான்.இந்த, 21ம் நுாற்றாண்டின் வரலாற்றில் மிக ஈரமான, இருண்ட பக்கங்கள் இவை. இந்த வைரஸ் தொற்று, மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்க, மத்திய - மாநில அரசுகளுடன், நாம் ஒவ்வொருவரும், கட்டுக்கோப்புடன் ஒத்துழைக்க வேண்டும். உலகமே, இந்த எதிர்பாராத திடீர் தாக்குதலில் நிலைகுலைந்து போயுள்ளதால், பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், நோய்த்தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக, பல ஆயிரம் கோடி ரூபாயை செலவிட வேண்டியுள்ளது. அரசுக்கு இப்போது எந்த வகையிலும் வருவாய் இல்லை. எனினும், அன்றாட பிழைப்பு நடத்தும், எளிய வாழ்வாதாரம் உள்ள மக்களைக் காப்பாற்றும் பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. அதனால், நிதி பற்றாக்குறையிலும், செழிப்பாக சில அறிவிப்புகளை வெளியிடுகிறது.எனவே, அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்க, குடிமக்களாகிய நாமும், அவரவரால் முடிந்த அளவு உதவி செய்ய வேண்டும். அவ்வாறு செய்ய, கடமையும் பட்டுள்ளோம். அள்ளிக் கொடுக்க முடிந்த பிரபலங்கள், அள்ளிக் கொடுக்கின்றனர். அவர்களுக்கு நம் பாராட்டையும், நன்றியையும் தெரிவிக்கும் அதே வேளையில், நாமும் சிறிது, கிள்ளியாவது கொடுக்கலாமே!
வெளி மாநிலங்களில் இருந்து இங்கு வந்திருப்பவர்களுக்கும், எளிய மக்களுக்கும், உணவு, உறைவிடம் ஏற்பாடு செய்து கொடுத்து வருகிறது அரசு. நிறைய தன்னார்வலர்களும், உணவு தயாரித்து கொடுத்து, அவர்களின் பசியை போக்கி வருகின்றனர் என்பதை நாளிதழ்களில் படித்த போது, எதுவும் செய்ய முடியவில்லையே என்ற ஏக்கம் எழுந்தது.
நிவாரண நிதி
வீட்டில் இருந்தபடி, சமைத்து சாப்பிட்டு, நாளிதழ்கள், புத்தகங்கள் படித்து அந்த நாள் அமைதியாக சென்றாலும், மனதில் ஏதோ உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது. ஒரு சிறு தொகையை, அரசின் நிவாரண நிதிக்கு அனுப்பிய பிறகே, அந்த உறுத்தல் மறைந்தது.
எனவே, நோய் பரவலைத் தடுக்கப் போராடும் அரசுக்கு, நாமும் சிறு அணிலாகத் துணை நிற்போம்; தோள் கொடுப்போம். 'சிறு துளி பெருவெள்ளம்' என்பதை நினைவு கூர்வோம். தன் குடும்பம், வறுமையில் வாடிய போதும், வீட்டில் இருந்த தானியங்களை, காக்கை குருவிகளுக்கு அளித்து, ஆனந்தப்பட்டவர் மகாகவி பாரதியார்.
சுதந்திர போராட்ட காலத்தில், துாத்துக்குடியில் வெள்ளையருக்கு சொந்தமான பருத்தி ஆலையில், தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க, வேலை நிறுத்தம் நடத்தி, வெற்றி கண்டவர், வ.உ.சிதம்பரனார். வேலை நிறுத்த காலத்தில், அந்தத் தொழிலாளர் குடும்பங்களின் பசியைப் போக்க, தன் மனைவி, குழந்தைகளின் நகைகளை விற்று, நிதி திரட்டி கொடுத்தார், செக்கிழுத்த அந்தச் செம்மல்.
சுதந்திர போராட்ட காலத்தில், காந்தியடிகள் கேட்டதால், மக்கள் தங்கள் நகைகளை, நாட்டு விடுதலை போராட்டத்திற்காக, தானமாக வழங்கினர் என்பது வரலாறு.தன்னலமற்ற தலைவர்களின், தியாகச் செம்மல்களின் வழி வந்த நாமும், நம்மால் முடிந்ததை அவசியம் செய்வோம். 'நாடென்ன செய்தது நமக்கு...' என்ற அர்த்தமில்லாத கேள்விகளை தவிர்த்து, 'நாம் என்ன செய் தோம் நாட்டுக்கு...' என, எல்லாரும் எண்ணிப் பார்க்க வேண்டிய தருணம் இது.மத்திய - மாநில அரசுகளுக்கு நிதியுதவி அளிக்காவிட்டாலும், பண உதவி செய்ய முடியாவிட்டாலும், அரசின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு, வெளியே அனாவசியமாக அலைவதைத் தவிர்த்து, வீட்டிலேயே தனித்து இருந்தால், அதுவே, நாட்டுக்கு நாம் செய்யும் மிகப் பெரிய நன்மையாக இருக்கும்.
உண்மையில், தனிமை என்பது ஒரு வரம். இது, அசாதாரணமான ஒரு சூழலில் ஏற்பட்டிருக்கும் தனிமை என்றாலும், ஆக்கபூர்வமாகவும், நல்ல அனுபவமாகவும், இதை ஆக்கிக் கொள்ளலாம். எப்போதும் பரபரப்பாக ஓடிக் கொண்டே இருந்த உலகில், நம் வாழ்க்கையில், பட்டென்று ஒரு பேரமைதி ஏற்பட்டு உள்ளது; ஆழ்ந்து அதை அனுபவியுங்கள். உள்நோக்கிய சிந்தனைகளை வளர்த்தெடுங்கள். குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடி, குடும்ப உறவை பலப்படுத்துங்கள்.
வாழ்க்கை போராட்டம்
ஊரடங்கால், வீட்டில் பொழுது போகாமல், ஒரு பிரிவினர் உள்ளனர். இன்றைய பொழுதை எப்படிக் கழிக்கப் போகிறோம் என்ற வேதனையில், எளிய மக்களின் வாழ்க்கைப் போராட்டமும் இங்கு உள்ளது. மேலும், நோய் பாதித்த சிலரின் உயிர் போராட்டமும், சமன் செய்ய முடியாத நிலைப்பாடு கொண்டது தான் இந்த உலகம்.உயிருக்கு முன், பணம் துச்சம் என்பதை, இத்தாலி மக்கள், கரன்சிகளை வீதியில் வீசி சென்றதன் மூலம் அறியலாம். எனவே, இனியாவது அளவான ஓட்டத்துடன், அழகாக வாழ முயற்சிப்போம்.ஊரடங்கால், இயற்கை அன்னை தன்னைப் புதுப்பித்துக் கொள்ள, புது அவதாரம் எடுத்திருக்கிறாளோ என்று எண்ணும் வகையில், உலகம் முழுதும் ஊரடங்கால், காற்று மாசு பெருமளவில் குறைந்துள்ளது.
ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த, இயற்கை சூழலியலாளர், கிரேட்டா என்ற மாணவி நடத்தி வரும், 'ப்ரைடே பார் ப்யூச்சர்' விழிப்புணர்வு நிகழ்ச்சி போல, இனி, மாதம் ஒரு முறை, உலகெங்கும், 'சன்டே பார் ஷட் டவுன்' என, ஞாயிறு தோறும் முழு அடைப்பு என்பதை நடைமுறையில் கொண்டு வந்தால், இயற்கை சற்றே, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளும்.ஆண்டுதோறும் அன்னையர் தினம், காதலர் தினம் என, எத்தனையோ தினங்கள் கொண்டாடுகிறோம். ஏப்., 22 எதற்கான தினம் என, நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்... அது, உலக புவி நாள்!
நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும், வரும், 22ம் தேதி அன்று, பூமாதேவிக்கு மரியாதை செலுத்தலாம்; அதை, வீட்டில் இருந்தபடி செய்வோம்.கொரோனாவுக்கு பயந்து மேற்கொள்ளும் சுகாதார பணிகளை தொடர்ந்து செய்வதன் மூலமும், இப்போது பின்பற்றப்படும், தனி மனித சுகாதார பழக்கங்களை, தொடர்ந்து பின்பற்றுவதன் மூலமும், அந்த உயிர்கொல்லிக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதன் மூலமும், கொரோனாவுக்கு சாவு மணி அடிப்போம்; மீண்டும் அதுபோன்ற தொற்று தொற்றாமல் இருக்க, சுகாதாரமாக இருப்போம். இனிவரும் காலங்களில், ராணுவத்துக்காக செலவு செய்வதை, உலக நாடுகள் குறைத்து, விவசாயம், உணவு பொருள் உற்பத்தி, சுகாதாரம், மருத்துவம், மருத்துவ ஆராய்ச்சி போன்ற, மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு, அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
பாரத பூமி, பழம்பெரும் ஆன்மிக பூமி. ஆன்மிக உணர்வும், சாத்விக உணவு முறையும் கொண்ட நம் மக்கள் வாழும் புண்ணிய பூமி. அதை அவ்வாறே, தொடர்ந்து வரும் காலங்களுக்கும் பராமரிப்போம். வாலியை மறைந்திருந்து வதம் செய்த, ஸ்ரீ ராமபிரானைப் போல, கொடிய அரக்கனான கொரோனாவை, வீட்டினுள் மறைந்திருந்து, நாமும் வீழ்த்துவோம்; நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்போம்; தனித்திருப்போம்!
அபிராமி
சமூக ஆர்வலர்
தொடர்புக்கு:இ - மெயில்: ikshu1000@yahoo.co.in