புதுடில்லி: 'இதயமற்ற அரசு தான், ஒன்றும் செய்யாமல், இவற்றை வேடிக்கை பார்க்கும்' என காங்., கட்சியை சேர்ந்த முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சீனாவிலிருந்து கிளம்பிய உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 16,116 ஆக அதிகரித்துள்ளது. 519 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் மே 3 வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ப.சிதம்பரம் டுவிட்டரில் பதிவிட்டதாவது: நம் நாட்டில், எண்ணற்ற மக்கள், கையில் பணம் இல்லாமல், இலவசமாக வினியோகிக்கும் உணவை பெற வரிசையில் காத்திருப்பதை, நாம் தினமும் பார்க்கிறோம். இதயமற்ற அரசு தான், ஒன்றும் செய்யாமல், இவற்றை வேடிக்கை பார்க்கும். அரசு, மக்களின் பசியை ஏன் போக்கக் கூடாது? ஒவ்வொரு ஏழை குடும்பத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்து, அவர்களுக்கு தேவையான உணவு தானியங்களை ஏன் இலவசமாக வழங்கக் கூடாது? இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE