லக்னோ: மாநிலத்தின் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் ஆதரவற்றவர்களுக்கு தலா ரூ.1000 வழங்க உள்ளதாக உ.பி., மாநில அரசும் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் இரண்டாம் கட்டமாக வரும் மே மாதம் 3 ம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் வரிசைப்பட்டியிலில் 6 வது மாநிலமாக உ.பி., இடம் பிடித்துள்ளது. இம் மாநிலத்திலும் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.
ஊரடங்கு கால கட்டத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் உட்பட பல்வேறு பிரிவினர் வேலை இன்றி தவித்து வருகின்றனர். அவர்களின் துயரை போக்கும் வகையில் கூட்டுறவு நியாய விலை கடைகள் மூலம் தலா ரூ. 1000 வழங்கப்பட்டது. மேலும் கட்டுமானதொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு கூடுதலாக ரூ.1000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதனிடையே தமிழக அரசைப்போலவே உ.பி., மாமநில அரசும் கிராமப்புற மற்றும் நகர்புறங்களில் ஆதரவற்றவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ரூ.1000 வழங்க முடிவு செய்துள்ளது. இது குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். மேலும் 5லட்சம் தொழிலாளர்களுக்கு வேலைவாயப்பு வழங்குவது குறித்து குழு ஒன்றை அமைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.