புதுடில்லி: ஊரடங்கு நடவடிக்கைகளை தளர்த்துவதாக கேரள அரசு அறிவித்துள்ளதை தொடர்ந்து மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார். மேலும், ஏப்.,20க்கு பிறகு சில தளர்வுகள் செய்யப்படுவதாகவும் அறிவித்திருந்தார். இதற்கிடையே, கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால், பாதிப்பு அடைப்படையில் 4 மண்டலமாக பிரிக்கப்பட்டு, படிப்படியாக தளர்வு செய்யப்படும் எனவும், வாகனங்களில் செல்ல ஒற்றைப்படை, இரட்டைப்படை முறை நடைமுறைப்படுத்தப்படும் எனவும் கேரளா முதல்வர் பினராயி விஜயன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், உள்துறை அமைச்சகம் சார்பில் கேரளா அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், கேரள அரசு, மாநிலத்தின் சில பகுதிகளில் கட்டுப்பாடுகளை தளர்த்துவதை பார்க்கையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களை மீறுவதாக உள்ளதாக கூறி கடிதம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து கேரளா சுற்றுலாத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறியதாவது: மத்திய அரசு வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு இணங்க தான், நாங்கள் தளர்வு அளித்துள்ளோம். சில தவறான புரிதல்களால் மத்திய அரசு விளக்கம் கேட்டிருக்கலாம். நாங்கள் விளக்கம் அளித்தவுடன், பிரச்சினை தீர்க்கப்படும் என்று நம்புகிறேன். அரசு வகுத்துள்ள அனைத்து விதிமுறைகளையும் நாங்கள் பின்பற்றினோம். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE