ஊட்டி: ரேபிட் டெஸ்ட் கருவி மூலம் நீலகிரி மாவட்டத்தில், கொரோனா பரிசோதனை துவங்கியது.
நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 9 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் கோவை ஈஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் 4 பேர் குணமடைந்து வீடுதிரும்பினர். எஞ்சியவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், நீலகிரி மாவட்டத்திற்கு நேற்று 300 ரேபிட் டெஸ்ட் பரிசோதனை கருவிகளை மாநில அரசு அனுப்பி வைத்தது. இது நேற்று மாலை வந்தது.
இந்த கருவி மூலம் பரிசோதனை செய்யும் பணி இன்று(ஏப்., 20) துவங்கியது. மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்தார். முதல்கட்டமாக, சுகாதார பணியாளர்கள், போலீசார் மற்றும் அரசு அலுவலர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து மாவட்டத்தில் தனிமைபடுத்தப்பட்ட பகுதிகளான காந்தல், குன்னூர் ராஜாஜிநகர், லோயர்பஜார், கைக்காட்டி உள்ளிட்ட பகுதிகளில் ரேபிட் டெஸ்ட் கருவிகள் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன் பின்னர் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், மருந்து கடைகள் வழக்கம் போல் செயல்படுகிறது. மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்களுக்கு பற்றாக்குறை ஏதும் இல்லை. பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றால் 1077 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். கடைகளுக்கு சீல் வைக்கப்படும் எனக்கூறினார்.