வாசிம்: ஊரடங்கு காலத்தில், மஹாராஷ்டிரா மாநிலத்தில், வாசிம் பகுதியில் வசிக்கும் கணவன், மனைவி, தங்களது இடத்தில், கிணறு வெட்டி, குடிதண்ணீர் பிரச்னையை தீர்த்துள்ளனர்.

கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 21 நாட்கள் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, பின்னர் மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரும், ஒரு வேலையை பார்க்கின்றனர். ஆனால், மஹாராஷ்டிர மாநிலம் வாசிம் பகுதியில் வசிக்கும் கஜனன் பக்மோடே அவரது மனைவி புஷ்பா ஆகியோர் இணைந்து, தங்களது இடத்தில் 25 அடி ஆழத்திற்கு கிணறு தோண்டியுள்ளனர். இதன் மூலம் அவர்களது தண்ணீர் பிரச்னை தீர்ந்துள்ளது. இதற்காக அவர்கள், எந்த நவீன சாதனங்களையும் பயன்படுத்தவில்லை. வீட்டில் இருந்த பொருட்கள் மற்றும் கைகளை பயன்படுத்தியுள்ளனர். அதற்கு அவர்களது இரண்டு குழந்தைகளும் உதவியதுடன், உற்சாகப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக கஜனன் பக்மோடே கூறுகையில், ஊரடங்கு ஆரம்பித்த 21வது நாளில் கிணறு வெட்ட துவங்கினோம். தண்ணீர் வர துவங்கியதும் எங்களுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தோம். ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. நாங்கள் ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தோம். நாங்கள் கலந்து பேசி கிணறு வெட்ட முடிவு செய்தோம். மனைவி பூஜை செய் கிணறு வெட்டும் பணியை துவக்கி வைத்தார்.

நாங்கள் பணியை துவக்கியதும், அக்கம்பக்கத்தினர் எங்களை கிண்டல் செய்தனர். ஆனால், 25 அடி தோண்டியதும் தண்ணீர் வந்தது. உள்ளூர் நிர்வாகம் அளித்துவரும் தண்ணீர் போதுமானதாக இல்லை. இதனால், கிணறு வெட்ட முடிவு செய்தோம். எங்களது பணி, எங்களுக்கு பெருமை அளிக்கிறது. இதன் மூலம் தண்ணீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைத்தது. இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE