புதுடில்லி: இந்தியாவின் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ இயங்குதளத்தின் குறைந்த அளவிலான பங்குகளை வாங்க 45,574 கோடி ரூபாயை முதலீடு செய்ய ஒதுக்கியுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் கிட்டத்தட்ட 400 மில்லியன் பயனர்கள் வாட்ஸ்ஆப் செயலியினை பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் தற்போது கட்டண சேவையில் ஈடுபட்டு வரும் கூகுள்பே மற்றும் பேடிஎம் நிறுவனங்களுக்குப் போட்டியாக ‛வாட்ஸ்ஆப்'பை நிர்வகிக்கும் பேஸ்புக் நிறுவனம் தனது டிஜிட்டல் கட்டண சேவையை இந்தியாவில் தொடங்க முயற்சிக்கிறது.
இந்நிலையில், சிறு குறு வணிகங்களையும் மக்களையும் இணைக்க ரிலையன்ஸ் நிறுவனத்தின் இ-காமர்ஸ் நிறுவனமான ஜியோ-மார்ட்டுடன் பேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்ஆப் இணைப்பதில் கவனம் செலுத்திவருவதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக ஜியோ இயங்குதளத்தின் , 9.99 சதவீத பங்குகளை வாங்குவதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

இது குறித்து பேஸ்புக் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், ‛‛ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஒரு பகுதியான ஜியோ பிளாட்பார்ம்ஸ் லிமிடெட்டில் நாங்கள் 5.7 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.45,574 கோடி) முதலீடு செய்வதாக அறிவித்துள்ளோம். இதன் மூலம் அந்நிறுவனத்தின் குறைந்த அளவு பங்குதாரராக பேஸ்புக் மாறும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.