அறிவும், அன்பும் மனதில் இருந்தால், எந்த இன்னலையும் கடந்து செல்லலாம், காலங்கடந்தும் வாழமுடியும் என்ற நம்பிக்கையை விதைக்கும் வகையில், கமல் எழுதிய, அறிவும், அன்பும்…' என்ற பாடல் நாளை வெளியாகிறது.பொருளாதாரத்தை தேடி ஓடிய ஓட்டம், கொரோனாவால் கட்டுப்பட்டு கிடக்கிறது.
கமல் கூறுகையில், ‛‛பொருளாதாரம், நவீன வாழ்க்கையை தாண்டி அழியாத உண்மை என்றால் அது, அறிவும், அன்பும் மட்டுமே. இதன் மூலம் எந்த இன்னலையும் கடந்த செல்லலாம். காலங்கடந்தும் வாழ முடியும். இந்த நம்பிக்கையை விதைக்கும் வகையில், ‛அறிவும் அன்பும்…' என்ற பாடலை எழுதியுள்ளேன்,'' என்றார்.
ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள இப்பாடல் இந்தியாவில் உள்ள அனைத்து சிறந்த பாடக, பாடகியர், இசையமைப்பாளர்களான, மாஸ்டர் லிடியன், யுவன்சங்கர்ராஜா, அனிருத், தேவி ஸ்ரீபிரசாத், ஸ்ருதிஹாசன், சித்ஸ்ரீராம், பாம்பே ஜெயஸ்ரீ உள்ளிட்ட பலரோடு கமலும் இணைந்து பாடியுள்ளனர். இப்பாடலின் ஆடியோ மற்றும் வீடியோ வரும் 23ம் தேதி வெளியிடப்படுகிறது.

அப்பாடல் வரிகள் முதல் முறையாக தினமலர் வாசகர்களுக்காக:
பொது நலமென்பது தனி மனிதன் செய்வதே
தன் நலமென்பதும் தனி நபர்கள் செய்வதே
அலாதி அன்பிருந்தால் அனாதை யாருமில்லை
அடாத துயர் வரினும் விடாது வென்றிடுவோம்
அகண்ட பாழ் வெளியில் ஓர் அணுவாம் நம்உலகு
அதில் நீரே பெருமளவு. நாம் அதிலும் சிறிதளவே
சரி சமம் என்றிடும் முன்பு, உனைச் சமம் செய்திடப் பாரு
சினையுறும் சிறு உயிர் கூட உறவெனப் புரிந்திடப் பாரு
உலகிலும் பெரியது உம் அகம் வாழ் அன்பு தான்
புதுக் கண்டம் புது நாடு என வென்றார் பல மன்னர்
அவர் எந்நாளும் எய்தாததை சிலர்
பண்பால் உள்ளன்பால் உடன் வாழ்ந்து
உயிர் நீத்து அதன் பின்னாலும்
சாகாத உணர்வாகி உயிராகிறார்
அழிவின்றி வாழ்வது நம் அறிவும் அன்புமே
-நமது நிருபர்-