பாட்னா: பீஹாரில் அதிகாரி வாகனத்தை தடுத்து நிறுத்தியதற்காக, போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரை கட்டாயப்படுத்தி 50 முறை தோப்புக்கரணம் போட வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக மே 3 வரை நாடு தழுவிய ஊரடங்கு நீட்டிக்கபட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு தவிர பொதுமக்கள் வெளியே நடமாட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பீஹாரின் ஜோகிஹாட் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட சூரஜ்பூர் புல் பாலம் அருகே பணியில் இருந்த காவலர் கனேஷ் லால் தத்மா, மாவட்ட வேளாண் அதிகாரியாக இருக்கும் மனோஜ் குமார் என்பவரின் காரை தடுத்து நிறுத்தி, உரிய அனுமதி இருக்கிறதா எனவும் வினவியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மனோஜ்குமார், காவலர் கணேஷ் லாலை கடுமையாக வசை பாடியதோடு, 50 முறை தோப்புக்கரணம் போட வைத்துள்ளார். அதோடு மட்டுமின்றி, வீடியோ கான்பரன்ஸ் மாநாட்டுக்கு மட்டும் செல்லாமல் இருந்திருந்தால், காவலரை சிறைக்கு அனுப்பி இருப்பேன் எனவும் மிரட்டியுள்ளார். வீடியோவில் போலீஸ் அதிகாரி ஒருவர், மூத்த அதிகாரியின் முன்னால் தன்னை அவமதித்து விட்டதாக மேலும் கணேஷ் லாலை கடுமையாக திட்டுகிறார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

டிஜிபி கடும் கண்டனம்:
ஊரடங்கு காலத்தில் பணியில் இருந்த காவலருக்கு நேர்ந்த சம்பவத்திற்கு பீஹார் டிஜிபி குப்தேஸ்வர் பாண்டே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் சம்பவம் குறித்து ஐ.ஜியுடன் பேசியுள்ளதாகவும், உரிய விசாரணை அறிக்கைக்கு பின் தவறு செய்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்தார். ஊரடங்கை அமல்படுத்துவதில் நிர்வாகத்தின் ஒருபகுதியாக உள்ள காவலரை அவமதித்து உள்ளனர். இது மிகவும் வெட்கக்கேடானது மற்றும் மனித கண்ணியத்துக்கு எதிரானது எனவும் தெரிவித்துள்ளார்.
தேஜஸ்வி யாதவ் கண்டனம்:
பீஹாரில் நடந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவரான தேஜஸ்வி யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார். ‛பீஹாரில் அதிகாரிகள் கட்டுப்பாடுகள் இன்றி செயல்பட்டு வருகின்றனர். அனுமதி பாஸ் கேட்டதற்காக ஒரு மாவட்ட வேளாண் அதிகாரி ஒரு வயதான காவலரை எவ்வாறு தோப்புக்கரணம் போட சொல்லலாம்,' என வினவியுள்ளார்.