புதுடில்லி:கொரோனா வைரஸ் பிரச்னையில், மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு, மேற்கு வங்கம் முழு ஒத்துழைப்பு அளிக்கும் என, அம்மாநில தலைமைச் செயலர், ராஜீவா சின்ஹா, மத்திய உள்துறை செயலர், அஜய் பல்லாவிடம் உறுதி அளித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய சென்ற, மத்திய அரசு அதிகாரிகள் குழுவினருடன், மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு ஒத்துழைக்கவில்லை என, குற்றம் சாட்டப்பட்டது.அதிகாரிகள் குழுவினர், வைரஸ் பாதித்த பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது, சுகாதார அதிகாரிகளை சந்திப்பது போன்றவற்றிலும் உறுதுணையாக இல்லை என, மத்திய அரசு கூறியது.

இதையடுத்து, மத்திய உள்துறை செயலர், அஜய் பல்லாவுக்கு, மேற்கு வங்க தலைமை செயலர், ராஜீவா சின்ஹா, எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:மத்திய அரசின் குழுவினருக்கு, மாநில அரசு ஒத்துழைப்பு தரவில்லை என்பது உண்மை அல்ல. ஒரு குழுவினருடன், இருமுறை ஆலோசனை கூட்டங்களை நடத்திஉள்ளேன். மற்றொரு குழுவுடன் தொடர்பில் உள்ளேன்.
பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், மத்திய அரசு மற்றும் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள், மாநிலத்தில் முறையாக செயல்படுத்தப்படுகின்றன. மத்திய குழுவினர், எங்களுடன் கலந்தாலோசிக்காமலும், முன்னறிவிப்பு இன்றியும் வந்துள்ளனர். மேலும், எங்களிடம் இருந்து எந்த உதவியையும் அவர்கள் எதிர்பார்க்க வில்லை.
கோல்கட்டாவில் இருந்த அபூர்வா சந்திரா தலைமையிலான குழுவினர், ஏப்., 20ல், என் அலுவலகம் வந்து, ஊரடங்கு மற்றும் வைரஸ் பரவல் தடுப்பில், மாநில அரசின் நடவடிக்கைகள் குறித்து பேசினர். சிலிகுரியில் இருந்த குழுவின் தலைவர் வினீத் ஜோஷியிடம், மாநில அரசின் நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்து உள்ளேன்.
ஊரடங்கு குறித்து மதிப்பீடு செய்ய, கோல்கட்டாவின் பல பகுதிகளுக்கு அவர்கள் சென்றனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான, மாநில அரசின் நடடிக்கைகள் குறித்து, அவர்களுக்கு விளக்கம் அளித்துள்ளேன்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் பரவல் பிரச்னையில், மேற்கு வங்கத்தை மட்டும் குறை கூறுவதற்காக, மத்திய அரசு, ஆய்வு குழுவினரை அனுப்புவதாக, முதல்வர், மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியிருந்த நிலையில், தலைமைச் செயலரின் இந்த கடிதம், பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என, தெரிகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE