கொழும்பு: இலங்கையில் இதுவரை, 330 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்தியா கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக, இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பியுள்ளதாக நேற்று செய்திகள் வெளியாகியிருந்தன. இதை இலங்கை அரசு மறுத்துள்ளது.

இலங்கை பாதுகாப்புத் துறை செயலர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளது:கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளில், இலங்கை பாதுகாப்பு பிரிவு, மற்ற நாடுகளுக்கு முன்னுதாரணமாக செயற்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா ஒழிப்புக்காக மற்ற நாடுகளின் உதவியை இலங்கை கோரியதாக கூறுவது முற்றிலும் தவறானது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கத் தேவையான மருந்துகளை இந்தியா இலவசமாக இலங்கைக்கு கொடுத்துள்ளது. அதற்காக, இந்தியாவின் ராணுவ உதவியை இலங்கை கோரியுள்ளதாகக் கூறுவது அபத்தமானது. இந்தியா மட்டுமின்றி எந்தவொரு நாட்டிலிருந்தும் இந்த விவகாரத்துக்காக ராணுவ உதவியை இலங்கை ஒருபோதும் கோரப்போவதில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE