பேரூர்: ஊரடங்கு உத்தரவு காரணமாக, குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு, கோவையை சேர்ந்த கல்லுாரி மாணவர் இளநீர் வியாபாரியாகி உள்ளார்.

நாடு முழுதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால், அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள் வீடுகளில் முடங்கி, மொபைல் போன், டிவி நிகழ்ச்சிகளில் மூழ்கியுள்ளனர். பலர், நண்பர்களுடன் சேர்ந்து, தடை உத்தரவை மதிக்காமல் கிரிக்கெட் விளையாடி பொழுதை கழிக்கின்றனர்.
இது போன்ற சூழலில், கல்லுாரிக்கு செல்லும் கூலித்தொழிலாளியின் மகன், குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இளநீர் வியாபாரியாக மாறியுள்ளார். அப்பாவுக்கு போதிய வருவாய் இல்லாத நிலையில், இளநீர் கடை வாயிலாக நாளொன்றுக்கு சாராசரியாக, 800 ரூபாய் வரை சம்பாதிப்பதாக கூறுகிறார்.

கோவை கோட்டைக்காடை சேர்ந்த மாணவர் மோகன் குமார், 23, கூறுகையில், ''தனியார் கல்லுாரியில், எம்.எஸ்.சி., முதலாமாண்டு படிக்கிறேன். 'கொரோனா' அச்சுறுத்தலால், 144 தடை உத்தரவு தவிர்க்க முடியாதது தான். ஆனால், தென்னை மரம் ஏறும் தொழிலில் ஈடுபட்டுள்ள அப்பாவுக்கு போதிய வருவாய் இல்லை. அதனால், குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இளநீர் வியாபாரியாகி விட்டேன். வெயிலும் வாட்டுவதால், விற்பனை நன்றாக உள்ளது. சிறுவாணி ரோட்டில் அவரசரத் தேவைக்காக சென்று வருவோரால் நாளொன்றுக்கு, 800 ரூபாய் வரை சம்பாதிக்கிறேன்,'' என்றார்.