வூஹான்: வூஹானில் கொரோனா வைரஸ் தாக்கம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. உலகையே இன்று உலக்கிக் கொண்டிருக்கும் கொரோனா என்னும் கொடிய அரக்கன் பரவியது வூஹான் நகரில் இருந்துதான். அங்கு சில மாதங்களுக்கு முன்னர் பல மரணங்கள் ஏற்பட்டன.
தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து மக்கள் மடிந்து கொண்டிருக்க, வூஹானில் மரணங்கள் குறைந்து இயல்பு நிலை திரும்பி வருகிறது. சீனாவின் ஹூபே மாகாணத்தில் அமைந்துள்ளது வூஹான். அங்கு 76 நாட்கள் ஊரடங்கு கடைபிடிக்கப் பட்டது. அது தற்போது தளர்த்தப்பட்டுள்ளது .அங்கு இயல்பு நிலை திரும்பியுள்ளது.
மேலும் பொதுமக்கள் சாலைகளில் நடமாடத் தொடங்கி உள்ளனர். கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் மீண்டும் கொரோனா தாக்கம் ஏற்பட்டுவிடுமோ என்கின்ற அச்சம் சீனார்கள் மத்தியில் இருக்கவே செய்கிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் 15ம் தேதி வூஹானில் கொரோனா பரவத் தொடங்கியது. ஜன.,23 முதல் ஏப்., 8 வரை வூஹானில் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்துள்ளது. தற்போது படிப்படியாக குறைந்துள்ளது சீனர்கள் திருப்தி அடையச் செய்துள்ளது. இன்று உலகம் முழுவது 2.6 மில்லியன் மக்கள் கொரோனாவால் அவதியுற்று வருகின்றனர். வூஹானின் பிரபல உயிரியல் பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் சுற்றுலா பயணிகள் கட்டாயம் சமூக விலகலை கடைபிடிக்க வலியுறுத்தப்படுகிறது.

ஸ்டார்பக்ஸ் உள்ளிட்ட பிரபல கடைகள் திறந்த வெளிகளில் கடைகளை நடத்த அனுமதிக்கப் பட்டுள்ளது. இதுவரை 68,128 பேர் ஹூபே மாகாணத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். சீன தொழிற்சாலைகள் மற்றும் போக்குவரத்துக்கு இதயப் பகுதியாக உள்ளது வூஹான் நகரம். தற்போது இங்கு 40 சதவீதம் தொழில் நலிவு ஏற்பட்டு உள்ளது.