சிங்கப்பூர்: புலம்பெயர்ந்த இந்தியர்களை மற்ற சிங்கப்பூர் குடிமகன்களைப் போலவே கவனித்துக் கொள்வோம் என பிரதமர் நரேந்திர மோடிக்கு, சிங்கப்பூர் பிரதமர் லீ ஹ்சியன் லூங் உறுதியளித்துள்ளார்.
கொரோனா (கோவிட்-19) பாதிப்பால் உலகமே அள்ளாடி வரும் நிலையில், சிங்கப்பூரில் புலம்பெயர்ந்த இந்திய தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். இந்நிலையில், இந்திய பிரதமர் மோடியுடன், சிங்கப்பூர் மற்றும் இந்தியாவில் நடந்து வரும் கொரோனா தெற்று நிலைமை குறித்து தொலைபேசியில் கலந்துரையாடியதாக சிங்கப்பூர் பிரதமர் லீ ஹ்சியன் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

மேலும், அவர் பதிவிட்டதாவது: நாங்கள் சிங்கப்பூர் குடிமகனை கவனிப்பது போலவே, இங்குள்ள புலம்பெயர்ந்த இந்திய தொழிலாளர்களையும் கவனித்துக்கொள்வோம் என்று நான் அவருக்கு (மோடி) உறுதியளித்தேன். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இங்கு வேலைக்கு வர தனிப்பட்ட தியாகங்களை செய்தார்கள். அவர்கள் சிங்கப்பூருக்கு பல பங்களிப்புகளை செய்துள்ளனர். எனவே, அவர்கள் மீது எங்களுக்கு பொறுப்பு உள்ளது. இந்தியாவில் இருந்த எங்கள் நாட்டினரை அழைத்து வர உதவியதற்காக மோடிக்கு நன்றி. இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.

இது குறித்து மோடி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: கோவிட்-19 தொற்றுநோய் குறித்த கருத்துக்களை பிரதமர் லீ ஹ்சியன் உடன் பரிமாறப்பட்டன. சிங்கப்பூரில் உள்ள இந்திய குடிமக்களுக்கு வழங்கப்பட்ட ஆதரவு மற்றும் கவனிப்புக்கு நன்றி. இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான மூலோபாய கூட்டு, கொரோனா தொற்றுக்கு பிந்தைய உலகில் ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்கு பங்களிக்க முடியும், என பதிவிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE