லக்னோ: உ.பி.,யில் ஊரடங்கு காலத்தில் கிராமப்புற பள்ளிகளுக்கு முன்னோடியாக, அரசு பள்ளி ஒன்று ஆன்லைனில் மாணவர்களுக்கு பாடம் கற்பித்து வருகிறது.
உ.பி மாநிலம் கவுசாம்பி மாவட்டத்தில் லவுதானா என்னும் கிராமத்தில் உள்ள அரசு தொடக்க பள்ளி வாட்ஸ் ஆப் செயலி மூலம் ஆன்லைன் வகுப்பினை துவங்கியுள்ளது. பள்ளியில் மொத்தமுள்ள 455 மாணவர்களில், 127 மாணவர்கள் வாட்ஸ் ஆப் குரூப் மூலம் பாடம் பயின்று வருகின்றனர். ஆன்லைனில் கற்பித்தல் முயற்சியை முன்னெடுத்தவரும், பள்ளியின் முதல்வருமான பங்கஜ் சிங் கூறியதாவது:

கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொருவரின் வீடுகளில் ஸ்மார்ட்போன் இருப்பது என்பது இயலாத காரியம். ஆனால் தற்போது அதன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இம்மாத முதல் வாரத்தில் 6 மாணவர்களுடன் ஆன்லைன் வகுப்பை துவங்கினேன். தற்போது மாணவர்களின் எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது. தங்களது வீடுகளில் ஸ்மார்ட்போன் இல்லாத குழந்தைகள், உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டாரின் போன்கள் மூலம் பள்ளி வாட்ஸ் ஆப் குரூப்பில் இணைந்து வருகின்றனர். ஒவ்வொரு நாளும் ஸ்மார்ட்போன் வைத்துள்ள தன்னுடைய உறவினர் அல்லது அண்டை வீட்டாரின் எண்ணை சேர்க்குமாறு, என்னுடைய மாணவர்களிடம் இருந்து அழைப்பு வந்துகொண்டு இருக்கிறது. அது ஊக்கமளிக்கிறது.

4 பாடங்கள்
ஆங்கிலம், ஹிந்தி, கணிதம், அறிவியல் என 4 பாடங்கள் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. இது தவிர கலை தொடர்பான வீட்டு பாடங்கள் மாணவர்களுக்கு கொடுக்கப்படுகின்றன. முதலில் ஆசிரியர்கள் பாடத்தினை எடுப்பர். பின்னர் மாணவர்கள் பாடம் தொடர்பான சந்தேகங்களை கேட்பர். அடுத்து தங்களுடைய அந்தந்த பாடத்தின் நோட்டு புத்தகத்தில் மாணவர்கள் விடைகளை எழுதி வைத்துக்கொள்வர். பள்ளி திறந்த பின்னர், ஆசிரியர்கள் மாணவர்களின் விடைகளை திருத்துவர். தற்போது 4 ஆசிரியர்கள் பள்ளியில் உள்ளனர்'. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், ஆன்லைன் மூலம் பாடம் நடத்தும் முன்னெடுப்பு மற்ற பள்ளிகளுக்கும் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. தற்போதைக்கு ஆன்லைன் கற்பித்தல் மட்டுமே ஒரே வழியாக உள்ளது. எனவே மெதுவாக கிராமப்புற மக்களும் இதனை நோக்கி திரும்ப வேண்டுமென கல்வி அலுவலரான மிதிலேஷ்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.