ஸ்ரீநகர் : காஷ்மீரில் புதிதாக 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டதாக ஜம்மு காஷ்மீர் முதன்மை செயலாளர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. ஜம்மு காஷ்மீரில் சுமார் 1000 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இது தொடர்பாக காஷ்மீரின் முன்மை செயலாளர் ரோஹித் கன்சால் கூறுகையில், கடந்த 24 மணி நேரத்தில் 1,071 பேரின் சோதனை மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது. கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் புதிதாக 40 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் காஷ்மீரின் வெவ்வேறு மாவட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 494 ஆக உள்ளது. ஒருவர் பலியானதையொட்டி மொத்த பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.