நம் பணத்தை நாமே மீட்போம்!
நம் தேசம், இப்போது இருக்கும் அசாதாரண நிலையில், நமக்கு தேவை, சில அசாதாரண தீர்வுகள். ஆன்மிகமும், தார்மிகமும் சேர்ந்த, மனோ தைரியம் கொண்ட தலைவரான, பிரதமர் மோடியால் மட்டுமே, துணிச்சலான முடிவை எடுக்க முடியும். அதன் மூலம், நம் தேசத்தை, பொருளாதார ரீதியாக, இந்த இக்கட்டான சிக்கலிலிருந்து வெளியே கொண்டு வர முடியும்.அதற்காக, பிரதமர் மோடிக்கு, சில யோசனைகள்...நம் நாடு, ஏழைகள் நிறைந்த பணக்கார நாடு. நம் நாட்டைச் சேர்ந்த, ஏராளமான கோடீஸ்வரர்கள், தங்களின் கறுப்பு பணத்தை, பல நாடுகளில், பதுக்கியுள்ளனர்.
வரி ஏய்ப்பு
வாடிக்கையாளர்களின் எத்தகைய முதலீட்டையும் கேள்வி கேட்காத, வரி ஏய்ப்புக்கு உதவும்; கறுப்பு பண பேர்வழிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும், சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளின் வங்கிகளில், இந்த, நம் நாட்டு கோடீஸ்வரர்கள், 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பதாக கூறப்படுகிறது.இதைத் தவிர, நம் நாட்டில், கிட்டத்தட்ட, 30 ஆயிரம் டன், கணக்கில் வராத தங்கம் இருப்பதாகவும் நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர். அந்த, 14 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், நம் தேசத்திற்கு ஒரு உபயோகமும் இல்லாமல் முடங்கிக் கிடக்கிறது. நமக்கு அந்த பணமும், தங்கமும் இப்போது மிகவும் தேவைப்படுகிறது.கொரோனா வைரஸ் தாக்கத்தால், பொருளாதார ரீதியாக, உலகமே முடங்கிக் கிடக்கும் நிலையில், தங்கத்தின் விலை ஏறிக் கொண்டே போகிறது. இந்தத் தருணத்தில், இந்த பணமும், தங்கமும், நம் நாட்டிற்கு, மிகவும் உபயோகமாக இருக்கும்.நம் நாட்டில், சில நேரங்களில், மிக கடுமையான குற்றவாளிகளையும் மன்னித்து, துாக்கு மேடையிலிருந்து தப்பிக்க வைத்து விடுகிறோம்.மனிதாபிமானம், நீதிமன்றங்களின் செயல்பாடு, ஆதாரங்களை நிரூபிக்காதது போன்ற பல காரணங்களால், துாக்கு தண்டனையிலிருந்து சில நேரங்களில், சில குற்றவாளிகள் தப்பி விடுகின்றனர்.அதுபோல, கறுப்பு பண கோடீஸ்வரர்களுக்கும் பொது மன்னிப்பை, பிரதமரான நீங்கள் அளிக்க வேண்டும். அவர்கள், தங்கள் பணத்தை, நம் நாட்டிற்குள் கொண்டு வர, வேண்டுகோள் விடுக்க வேண்டும். ஏனெனில், அவர்கள் தங்கள் பணத்தை, அமெரிக்கா போன்ற நாடுகளின், பண பத்திரங்களில், மிகவும் குறைவாக, 2 சதவீத வட்டிக்குத் தான், 20 ஆண்டு காலத்திற்கு முதலீடு செய்கின்றனர்.மேலும், தங்களின் கறுப்பு பணத்தை, சுவிட்சர்லாந்து போன்ற சில நாடுகளின் வங்கிகளில் பாதுகாப்பாக வைப்பதற்கு, அந்த, நம் நாட்டைச் சேர்ந்த கோடீஸ்வரர்கள், ஆண்டுதோறும் வட்டி கொடுக்கின்றனர்.
அவர்களின் பணத்தையும்,தங்கத்தையும்,நம் நாட்டின் நலனுக்கு, நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.அதற்காக, சில புள்ளிவிபரங்கள், கோரிக்கைகள், தகவல்களை, கீழே தருகிறேன்...முதலில், கறுப்பு பணம் பதுக்கி வைத்திருப்போருக்கு, பொது மன்னிப்பு வழங்க வேண்டும்; அதற்காக, பிரத்யேக சட்டத்தை அறிவிக்க வேண்டும். அந்த சட்டம், கறுப்பு பண முதலீட்டாளர்கள் மற்றும் தங்கத்தை இருப்பு வைத்திருப்போருக்கு, எக்காலங்களிலும், பாதுகாப்பு அளிக்கும் வழியில் இருக்க வேண்டும்.அரசின் அறிவிப்பை, பொது மன்னிப்பு சட்டத்தை, அவர்கள் ஏற்றுக் கொண்டால், கீழ்கண்டவற்றையும் செய்ய வேண்டும்.
குறைந்த அபராதம்
அவர்களிடம் உள்ள பணத்தையும், தங்கத்தையும், எஸ்.பி.ஐ., எனப்படும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மூலமாக, ரிசர்வ் வங்கியின் அனுமதியுடன், வெளி கொண்டு வர வேண்டும். மிகக் குறைந்த அபராதத்துடன், அவர்களை ஈர்க்கும் வழியில், வரி விதிக்க வேண்டும்.- இதனால், அவர்களின் கறுப்பு பணமும் நம் நாட்டிற்குள் வந்து விடும்; வரி வருவாயும் நமக்கு கிடைத்து விடும்.அவர்களின் கறுப்பு பணத்தை, இதற்காக உருவாக்கப்படும், பிரத்யேக இந்திய பண பத்திரங்களில் முதலீடு செய்ய வேண்டும். -அதற்கான ஆண்டு வட்டி, 2 சதவீதம் வழங்கி, 20 ஆண்டுகளுக்கு அந்த பணத்தை எடுக்காத வகையில்,பண பத்திரம் வழங்க வேண்டும்.வருடாந்திர வட்டிக்கு, வருமான வரி விதிக்கக் கூடாது. விவசாயத் துறை வருமானத்திற்கு வரி விதிக்கப்படுவதில்லை போல, இந்த சிறப்பு முதலீடுகளில் இருந்து கிடைக்கும் வட்டிக்கும், வருமான வரி விதிக்கப்படக் கூடாது. இதனால், ஆர்வமாக அந்த நபர்கள், தங்கள் பணத்தை, நம் நாட்டிற்கு கொண்டு வருவர்.முதலீட்டு காலமான, 20 ஆண்டுகள் முடிந்த பின், 20 சதவீத வரிப் பணத்தை, அரசு எடுத்துக்கொண்டு, மீதமுள்ள, 80 சதவீத முதலீட்டை, முதலீடு செய்தவர்களுக்கு திருப்பிக் கொடுத்து விட வேண்டும்.கணக்கில் காட்டாமல் வைத்துள்ள தங்கத்தையும், இந்த திட்டத்தின் படியே, நிதி பொருளாதாரத்திற்குள் கொண்டு வரலாம். கணக்கில் காட்டாமல் வைத்திருப்போர், எவ்வளவு தங்கம் வேண்டுமானாலும், முதலீடு செய்யலாம். அதற்கும், 2 சதவீதம், வருடாந்திர வட்டி அளிக்க வேண்டும்.
முதலீட்டு காலமான, 20 ஆண்டுகள் முடிந்தவுடன், 80 சதவீத தங்கத்தை, முதலீட்டாளருக்கே அரசு திருப்பிக் கொடுத்து விட வேண்டும்; 20 சதவீதத்தை, வரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். திருப்பிக் கொடுத்தல், பணமாக இன்றி, தங்கமாகவே வழங்க வேண்டும்.நம் நாடு, ஆண்டுக்கு, 800 டன் தங்கத்தை, அமெரிக்க டாலர் கரன்சி கொடுத்து இறக்குமதி செய்கிறது. ஆனால், நம் நாட்டில் தங்கத்தை, எந்த இடத்திலும், வெளிப்படையாக, எளிதாக விற்று விட முடியாது; இந்நிலை மாற வேண்டும். மக்கள் தங்கத்தை எளிதாக வாங்கவும், விற்கவும் வழி செய்ய, சட்டங்கள் வேண்டும்.கறுப்பு பணத்தை வைத்திருப்போர், தங்கத்தை கணக்கில் காட்டாமல் அதிக அளவு இருப்பு வைத்திருப்போர், மேற்கண்ட இரண்டு முறைகளில் முதலீடு செய்ய விரும்பவில்லை என்றால், விட்டு விடலாம். அவர்களுக்கு இன்னொரு வழி உள்ளது. 30 சதவீத வரிப்பணம் செலுத்தி, மீதம், 70 சதவீதத்தை வெள்ளைப் பணமாக மாற்றிக் கொள்ள அனுமதிக்க வேண்டும். அதுபோலவே, தங்கத்தையும், 30 சதவீத வரியாக பிடித்துக் கொண்டு, 70 சதவீதத்தை, அவர்களிடம், தங்கமாக ஒப்படைத்து விட வேண்டும்.இப்படி செய்வதால், கறுப்பு பணமும் ஒழிந்து விடும்; கணக்கில் காட்டப்படாத தங்கமும், கணக்கிற்குள் வந்து விடும்; அரசுக்கும், வரி வருவாய் கூடுதலாக கிடைக்கும். வெளிநாடுகளில் தேவையில்லாமல் இருக்கும் பணம், நம் நாட்டிற்குள் வந்து விடும்.இந்த முறை, அமலுக்கு வந்தால், நேரடி அன்னிய முதலீடுக்காக, நாம் யாரிடமும் கெஞ்சி நிற்க வேண்டிய அவசியமே இல்லை. நம் நாட்டினரின் பணம், கறுப்பு பணமாக, பிற நாடுகளில் முடங்கிக் கிடப்பதால், அந்த பணத்தை, அந்த நாடுகளில் இருந்து, சட்ட ரீதியாக திரும்பப் பெறுவது அவ்வளவு எளிதல்ல; தனி நபர்களாக, பல ஆண்டுகள் போராடினாலும் முடியாது.
பல நன்மைகள் உண்டு
இதை அறிந்ததால் தான், கறுப்புப் பண பதுக்கல் செய்யும் கோடீஸ்வரர்கள், வெளிநாடுகளின் தொழிற்சாலைகளிலும், இதர வியாபாரங்களிலும், தங்களின் கோடிக்கணக்கான பணத்தை முதலீடு செய்கின்றனர். இதை ஏன், நாம் புத்திசாலித்தனமாக யோசித்து, அப்பணத்தை நமக்கு உபயோகப்படும்படி செய்யக் கூடாது...இப்படி மாற்றி யோசித்து, வித்தியாசமான யுக்திகளை கையாண்டால், பல நன்மைகள் நமக்கு கிடைக்கும். நம் வங்கிகள், இந்த பண பத்திரத்திற்கு ஈடாக, அந்த நபர்களுக்கு, 2 சதவீத வட்டியில், தொழில் செய்ய கடன் தர முடியும். இதனால், அரசுக்கோ அல்லது வங்கிக்கோ, எந்த வித பண நஷ்டமும் ஏற்படும் அபாயமில்லை.வெளிநாடுகளில், யாரெல்லாம், கறுப்பு பணத்தை பதுக்கியுள்ளனர் என்ற நீண்ட பட்டியல், மத்திய அரசிடம் உள்ளது.- அந்த பட்டியலில், அரசியல்வாதிகள், வியாபாரிகள், அரசு உயர் அதிகாரிகள், இடைத்தரகர்கள், இன்னும் பலர் உள்ளனர்.சரி, வெளிநாடுகளில் கறுப்பு பணத்தை பதுக்கியுள்ளோருக்கு, மத்திய அரசு, பொது மன்னிப்பு வழங்குகிறது என்றே வைத்துக் கொள்வோம். அதை அவர்கள் ஏற்றால் தானே உண்டு என்ற சந்தேகமும் எழலாம். அத்தகைய சூழலில், பொது மன்னிப்பை புறக்கணிக்கும் இந்தியர்களின் பெயர்களை, பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்; சட்ட ரீதியாக, அவர்கள் மேல், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இப்போது இருக்கும் நிலையில், உலகில் பல நாடுகளில், பொருளாதாரம் சீரழிந்து, அந்த நாடுகளின் பணத்தின் மதிப்பும், வெகுவாக வீழ்ச்சி அடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நெருக்கடியான கால கட்டத்தில், தீர்க்கமாக சிந்தித்து, கறுப்பு பணத்தை வெளிக்கொண்டு வர வேண்டும்.இந்த நேரத்தில், அரசிடம் இவ்வளவு அதிக அளவு கறுப்புப் பணம், வெள்ளை பணமாக வந்து குவியும் எனில், பல திட்டங்களை, அரசால் செயல்படுத்த முடியும்; பணத் தட்டுப்பாடு இருக்காது.அரசின் வருமானத்திற்காகத் தானே, தனிநபர் வருமானம் மீது, வரி விதிக்கப்படுகிறது; இவ்வளவு பணமும், தங்கமும் நம்மிடம் வந்து சேரும் போது, தனி நபர் வருமான வரியை கூட, கொஞ்ச காலத்தில் நீக்கி விட முடியும்; வரி ஏய்ப்பு இருக்காது; இந்தியர்களை நேர்வழியில் மாற்றி விடும்.இது மட்டுமின்றி, வெகுஜன மக்களுக்கு, வீட்டு வசதி கிடைக்கவும், வாய்ப்பு உள்ளது. அரசு நிலம் வழங்கினால், உலகளவில் புகழ் பெற்ற, திறமையான பன்னாட்டு கட்டுமான நிறுவனங்கள், சதுர அடிக்கு, 1,200 ரூபாயில், தரமான குடியிருப்புகளை, மிகத் துரிதமாக கட்டித் தர முன்வரும்.
வருவாய் கிட்டும்
அதுபோல, 300 சதுர அடி கொண்ட, ஒரு படுக்கை வீட்டின் விலை, 3.5 லட்சம் ரூபாய்க்குள், அரசால் வழங்க முடியும். இதில், நிலத்தின் விலை கணக்கில் எடுக்கப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.இவ்வாறு ஏராளமாக கட்டப்படும் வீடுகளை, மாதம், 2,000 ரூபாய் வாடகைக்கு கொடுத்தால், முதலீட்டின் மீது, 7 சதவீத வருவாய் கிட்டும். அரசு இந்த முதலீட்டுக்காக, 2 சதவீத வட்டியே தருவதால், மீதமுள்ள, 5 சதவீதத்தை, உள்கட்டமைப்பு, மற்ற வசதிகளுக்காக செலவழிக்க, பணம் இருக்கும். 20 ஆண்டுகளுக்கு பின், குடியிருப்பை, வாடகை கொடுக்கும் குடும்பத்திற்கே சொந்தமாக்கி விட வேண்டும்.இந்த புதிய திட்டத்தை செயல்படுத்த, பல்வேறு துறை நிபுணர்களை, பிரதமர் தன் ஆய்வுக்குழுவில் சேர்க்க வேண்டும். சீனாவிலிருந்து வெளியேறும் ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளின் நிறுவனங்களை, இந்தியாவில் முதலீடு செய்ய அழைக்க வேண்டும். அந்த நிறுவனங்களுக்கு தேவையான வசதிகளை, உடனுக்குடன் செய்து கொடுத்தால், நம் நாடு மிக விரைவில் வளமாக முன்னேறும்!தொடர்புக்கு: prg.raj@gmail.comமொபைல் எண்: 97890 32054பிரித்விராஜ் கோபால்நிர்வாகவியல் ஆலோசகர்