புதுடில்லி: ''தீவிர பரிசோதனை வசதிகள் இல்லாமல், கொரோனாவை இந்தியாவால் வெற்றி பெற முடியாது,'' என, முன்னாள் பிரதமர், மன்மோகன் சிங் கூறினார்.
கொரோனா வைரஸ் தொடர்பான விவகாரங்களை கவனிக்க, காங்கிரசில், முன்னாள் பிரதமர், மன்மோகன் சிங் தலைமையில், மூத்த தலைவர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. வைரஸ் பரவல் தொடர்பாக, இந்த குழுவில் இடம் பெற்றுள்ள தலைவர்கள், வீடியோவில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்கின்றனர். இதை காங்கிரஸ் வெளியிட்டு வருகிறது.
மன்மோகன் சிங்: வைரசுக்கு எதிரான போரில், மக்களுக்குப் பரிசோதனை செய்வதற்கான வசதிகளில், பற்றாக்குறை பிரச்னைகள் இருக்கின்றன. தீவிரமான பரிசோதனை வசதிகளை விரைவு படுத்தாவிட்டால், போரில் நாம் வெல்ல முடியாது. தேடுதல், பரிசோதனை செய்தல் ஆகியவை தான், வைரசுக்கு எதிரான போரில் முக்கியமான ஆயுதங்கள். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விவகாரத்தில், மனிதநேயம், பாதுகாப்பு, நிதிவசதி போன்றவற்றின் அடிப்படையில், அவர்களை நாம் அணுக வேண்டும்.
காங்., - எம்.பி., ராகுல்: புலம்பெயர் தொழிலாளர்களைப் பாதுகாக்க, பரந்த அளவில் செயல் திட்டம் உருவாக்க வேண்டும். இதில், ஒவ்வொரு மாநில அரசும், ஒவ்வொரு விதமான நடவடிக்கையை கையாள்கின்றன. மாநிலங்களுக்கு இடையிலான பிரச்னை என்பதால், இதை மத்திய அரசு தான் கையாள வேண்டும். பெரியளவிலான பரிசோதனைகளே, கொரோனா ஒழிப்புக்கு முக்கியமான துருப்புச் சீட்டு என்பதை நிபுணர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். ஆனால், நம் நாட்டில், தேவையான சோதனை, 'கிட்'கள் இருந்தும், ஒரு நாளுக்கு, 40 ஆயிரம் பரிசோதனைகள் மட்டுமே நடத்தப்படுகின்றன. இதை ஒரு லட்சமாக உயர்த்த வேண்டும். இதில் இருக்கும் நெருக்கடிக்கு, பிரதமர் விரைந்து தீர்வு காண வேண்டும்.
முன்னாள் மத்திய அமைச்சர், சிதம்பரம்: புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எங்கிருந்து வந்தார்களோ, அங்கே செல்ல, அவர்களை அனுமதிக்க வேண்டும். அதற்கான வழிகளைக் காண வேண்டும். அவர்களுக்கு உணவு தானியமும், பணமும் வழங்க வேண்டும்.
காங்., பொதுச் செயலர், கே.சி. வேணுகோபால்: வைரசுக்கு எதிரான போரில், மத்திய அரசு தோல்வியடைந்துவிட்டது. மக்களை பாதுகாக்க, அரசுக்கு நாம் நெருக்கடி கொடுக்க வேண்டும்.
காங்., செய்தி தொடர்பாளர், ரண்ந்தீப் சுர்ஜேவாலா: மத்திய அரசின் நிதியுதவி திட்டம், வெற்றி பெறவில்லை. அரசு விரைந்து செயல்பட வேண்டும். ஜெய்ராம் ரமேஷ்: நம் மக்கள்தொகைக்கு குறைந்தது, 10 லட்சம் பரிசோதனை வசதிகள் தேவை. அப்போது தான், வைரசை ஒழிக்க முடியும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE