வாஷிங்டன்:தான் கிண்டலாகப் பேசியதை கிண்டல் செய்ததால், செய்தியாளர்கள் சந்திப்பையே, அமெரிக்கா அதிபர், டொனால்டு டிரம்ப் நிறுத்தி விட்டார்.
'கொரோனா' வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, அமெரிக்க அதிபர், டொனால்டு சமீபத்தில் அளித்த பேட்டியில், கொரோனா 'வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு, கிருமி நாசினியை ஏன் ஊசி மூலம் செலுத்தக் கூடாது; ஏன் புற ஊதாக் கதிர்களை உடலுக்குள் செலுத்தி சிகிச்சை அளிக்கக் கூடாது!' என, டிரம்ப் கேள்வி எழுப்பினார்.இது மருத்துவ நிபுணர்கள் உள்பட, பல்வேறு தரப்பினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

டிரம்ப் பேச்சை, பலரும் கிண்டல் செய்யத் துவங்கினர். 'நான் கிண்டலாகத் தான் அவ்வாறு கூறினேன்' என டிரம்ப், மறுநாள், விளக்கமும் அளித்திருந்தார்.ஆனாலும், பல்வேறு தரப்பினர் நையாண்டியைத் தொடர்ந்ததால், மக்களிடையே டிரம்பின் செல்வாக்கு சரியத் துவங்கியது.
அதையடுத்து, நாள்தோறும் அளிக்கும் பேட்டியை, அவர் நிறுத்த உள்ளதாக செய்திகள் வெளியாகின. அதற்கேற்றார்போல், நேற்று முன்தினம், டிரம்பின், பத்திரிகையாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது.சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், டிரம்ப் கூறியுள்ள தாவது:
பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி என்ன பயன்? தேவையில்லாத, துாண்டும் வகையிலான கேள்விகளையே, பத்திரிகையாளர்கள் கேட்கின்றனர். உண்மையை, துல்லியமாக வெளியிடவும் மறுக்கின்றனர். பத்திரிகைகளுக்கு, 'ரேட்டிங்' கிடைக்கிறது. ஆனால் மக்களுக்கு, பொய் செய்திகள் மட்டுமே கிடைக்கிறது. பேட்டிக்காக நேரத்தை செலவிடுவது வீண். அதனால், பேட்டி அளிப்பதை நிறுத்தியுள்ளேன்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.