புதுடில்லி :'ஊரடங்கை தளர்த்தி, பொருளாதாரதத்தை படிப்படியாக மீட்க, புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும்' என, ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர், ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.காங்கிரஸ் எம்.பி., ராகுல், ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர், ரகுராம் ராஜனுடன் நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாகப் பேசினார்.
பிரச்னையில்லை
அப்போது, ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை சீரமைப்பது பற்றி கேட்டார். அதற்கு ரகுராம் ராஜன் பதில் அளித்தார். இதன், 'வீடியோ' பதிவை, காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. அதில், ரகுராம் ராஜன் கூறியிருப்பதாவது:கொரோனா பரவலைத் தடுக்க, நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால், வேலையிழந்து தவிக்கும் ஏழைகளுக்கு உணவளிக்க, இந்தியாவுக்கு, 65 ஆயிரம் கோடி ரூபாய் தேவை.
புத்திசாலித்தனம்
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 200 லட்சம் கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், 65 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்குவதில் பிரச்னையில்லை. வைரஸ் பரவலை தடுக்க, ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டால், நாட்டின் பொருளாதாரம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும்.மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிட்டால், நம் நிதி மற்றும் பண மதிப்பு, குறைவாக தான் உள்ளது. அதனால், பொருளாதாரத்தை படிப்படியாக மீட்பதில், புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும்.கொரோனா பரவலை முழுமையாக கட்டுப்படுத்த, பல மாதங்கள் ஆகலாம். அதற்காக, பொருளாதாரத்தை முடக்க முடியாது. பொருளாதார செயல்பாடுகளை துவக்கினாலும், கொரோனா பாதிப்பு இருக்கத்தான் செய்யும். பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி, சிகிச்சையளிக்கும் பணிகள் தொடர வேண்டும். அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இந்தியாவின் உற்பத்திக்கும், விற்பனைக்கும், சர்வதேச அளவில் நல்ல சந்தை உள்ளது.அதனால், சர்வதேச, 'ஆர்டர்'களை இந்தியாவால் எடுக்க முடியும்; வெற்றிகரமாக்க முடியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.