புதுடில்லி: கொரோனா பரவலை தடுக்க எடுத்து வரும் நடவடிக்கையால், மக்களிடம் பிரதமர் மோடியின் செல்வாக்கு அதிகரித்துள்ளது, ஆய்வில் தெரிய வந்துள்ளது.அமெரிக்காவை சேர்ந்த, 'மார்னிங் கன்சல்ட்' என்ற நிறுவனம், இது தொடர்பாக ஆய்வு நடத்தி கூறியுள்ளதாவது:இந்தியாவின் பிரதமராக, மோடி, கடந்த ஆண்டு மே, 30ல் பதவியேற்றார். இதன் பின், மக்களிடம், அவரது செல்வாக்கு சரிந்தது.
நடவடிக்கை
முன் எப்போதும் இல்லாத அளவில், பொருளாதார வீழ்ச்சி, டில்லி கலவரம், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக, நாடு முழுதும் நடந்த போராட்டங்கள் போன்றவற்றால், மோடியின் செல்வாக்கு, ஜனவரியில், 76 சதவீதமாக குறைந்தது. மார்ச் மாத துவக்கத்தில், இந்தியாவால் கொரோனா பரவத் துவங்கியது. இதைக் கட்டுப்படுத்த, மோடி எடுத்த நடவடிக்கைகளால், அவரது செல்வாக்கு அதிகரித்துள்ளது.கடந்த மார்ச், 25ல், 76.8 சதவீதமாக இருந்த மோடியின் செல்வாக்கு, ஏப்ரல் பாதியில், 83 சதவீதமாகவும், இறுதியில், 93.5 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. பொருளாதார வீழ்ச்சி, குடியுரிமை திருத்த சட்டம் போன்ற பிரச்னைகளை, மக்கள் மறந்து விட்டனர்.மேலும், கொரோனா பரவலை தடுக்க, இந்தியா, வெளிநாடுகளுக்கு மருந்துகள் சப்ளை செய்ததன் மூலம், பிரதமர் மோடியின் மதிப்பு பெரிதும் உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், மோடியை, எதிர்க்கட்சிகளால் பெரிய அளவில் விமர்சிக்க முடியவில்லை.
வைரஸ் பரவல்
அமெரிக்கா போல, பரிசோதனைகள் மேற்கொள்ள முடியாத நிலையிலும், வைரஸ் பரவல் கட்டுக்குள் இருப்பதும், பலி எண்ணிக்கை குறைவாக இருப்பதும், மக்களிடம், பிரதமர் மோடியின் செல்வாக்கை அதிகரிக்க வைத்துள்ளன. ஆனால், ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின், மோடிக்கு முன் மாபெரும் சவால்கள் காத்திருக்கின்றன என்பதை மறுக்க முடியாது. ஊரடங்கால், பல லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். சிறு, குறு, நடுத்தர தொழில்கள் முடங்கியுள்ளன. மே, 3ம் தேதிக்குப் பின், நாட்டின் பொருளாதாரத்தை மீட்டு எடுப்பதில் தான், மோடியின் திறமை அடங்கியுள்ளது.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது பற்றி, காங்., செய்தி தொடர்பாளர், மனிஷ் திவாரி கூறுகையில், ''வைரஸ் பரவலால், நாட்டில், அரசியல் நடவடிக்கைகள் முடங்கியுள்ளன. ''அனைவரது மனதிலும், கொரோனா பயம் தான் உள்ளது. நாடு இயல்பு நிலைக்கு திரும்பிய பின் தான், செல்வாக்கு பற்றிய உண்மை தெரிய வரும்,'' என்றார்.