புதுடில்லி:
'பல மாவட்டங்களில், மே, 3ம் தேதிக்கு பின், ஊரடங்கு தளர்த்தப்பட உள்ளது'
என, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீனாவில் முதன்முதலில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ், இந்தியாவில், மார்ச் மாத துவக்கத்தில் பரவ ஆரம்பித்தது. பரவலைத் தடுக்க, மார்ச், 25ம் தேதி முதல், 21 நாட்களுக்கு, நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. வைரஸ் பரவல் குறையாததையடுத்து, பல மாநில முதல்வர்கள் கேட்டுக் கொண்டதால், ஊரடங்கு மேலும், 19 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு, நாளை மறுதினத்துடன் முடிகிறது.
முதல் கட்ட ஊரடங்கை அமல்படுத்துவதற்கு முன்பும், இரண்டாம் கட்ட ஊரடங்கை அமல்படுத்துவதற்கு முன்பும், மாநில முதல்வர்களுடன், பிரதமர் மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக ஆலோசனை நடத்தினார். இரண்டாம் கட்ட ஊரடங்கு அமலுக்குப் பின், வைரஸ் பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களிலும், பாதிப்பு இல்லாத மாவட்டங்களிலும், கடந்த, 20ம் தேதி முதல், ஊரடங்கு தளர்த்தப்பட்டது. இந்நிலையில், மே, 3ம் தேதிக்குப் பின், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து, பிரதமர் மோடி, சமீபத்தில் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார்.இதில் பங்கேற்ற முதல்வர்களில், புதுச்சேரி, மேகாலயா, மஹாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப் ஆகிய மாநில முதல்வர்கள், ஊரடங்கை மேலும், 15 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என, வலியுறுத்தினர். 'கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு நீட்டிப்பு அவசியம் என்றாலும், பொருளாதார நடவடிக்கைகளை தொடர்ந்து முடக்க முடியாது; அவை செயல்பட அனுமதிக்க வேண்டும்' என, மோடி, முதல்வர்களிடம் தெரிவித்தார்.இதையடுத்து, வைரஸ் பாதிப்பு இல்லாத மாவட்டங்களிலும், குறைவாக உள்ள மாவட்டங்களிலும், ஊரடங்கை மேலும் தளர்த்த, மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
கட்டுக்குள் வைரஸ் பரவல்
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம், 'டுவிட்டரில்' வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:நாட்டில், ஊரடங்கு தளர்வில், பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை, மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே வெளியிட்டுள்ளது. இவற்றை மக்கள் சரியாக பின்பற்றியதால், வைரஸ் பரவல் கட்டுக்குள் உள்ளது. அதிகம் பாதிக்கப்பட்டவையாக அறிவிக்கப்பட்ட பல மாவட்டங்களில், வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளது. வைரஸ் பாதிப்பு இல்லாத மாவட்டங்களிலும், பாதிப்பு குறைந்த மாவட்டங்களிலும், மே, 4ம் தேதி முதல், ஊரடங்கில் பல தளர்வுகள் அமல்படுத்தப்பட உள்ளன. இதற்கான வழிமுறைகள், இன்னும் மூன்று நாட்களில் வெளியிடப்படும். வழிமுறைகளை மக்கள் முறையாக கடைப்பிடித்து, வைரசை விரட்ட வேண்டும்.இவ்வாறு, மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நம்பிக்கை
ஊரடங்கால் பாதிக்கப்பட்ட புலம் பெயர்ந்த தொழிலாளர்களை, சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், சிறப்பு பஸ்கள் மூலம், தங்கள் மாநிலங்களுக்கு அழைத்து செல்ல, மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இது, சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வரும், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
பீஹார்
மாநிலம், முசாபர்பூரைச் சேர்ந்தவர், அமித் சோஹைல். குஜராத் மாநிலம்,
சூரத்தில், 'ரெடிமேட்' ஆடைகள் தயாரிப்பு ஆலை ஒன்றில், டெய்லராக வேலை
பார்த்து வந்தார். ஊரடங்கால் ஆலை மூடப்பட்டுள்ளது. கடந்த, 40 நாட்களுக்கு
மேலாக, சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல், சூரத்திலேயே சோஹைல் தவித்து
வருகிறார்.சோஹைல் கூறுகையில், ''மத்திய அரசின் அறிவிப்பு, நம்பிக்கையை
அளித்துள்ளது, கடந்த, 40 நாட்களாக, சரியான உணவு கிடைக்காமல் தவித்து
வருகிறேன். எங்கள் மாநில முதல்வர், எங்களை கைவிடமாட்டார்; நிச்சயம், எங்களை
அழைத்து செல்ல நடவடிக்கை எடுப்பார். விரைவில், என் மகனை கட்டிப்பிடித்து
மகிழ்வேன்,'' என்றார்.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சுமன், மஹாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.ஊரடங்கால் பாதிக்கப்பட்ட அவர் கூறுகையில், ''உணவு மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமல், பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளேன். சொந்த ஊருக்கு, நடந்தே செல்ல திட்டமிட்டேன்; ஆனால், நண்பர்கள் தடுத்துவிட்டனர். ம.பி., அரசு பஸ் வந்தவுடன், முதல் ஆளாக, அதில் ஏறி, ஊருக்கு திரும்புவேன், முதல்வர் மீது, எங்களுக்கு நம்பிக்கை உள்ளது,'' என்றார். இது போல், மேலும் பல தொழிலாளர்கள், சொந்த ஊருக்கு திரும்ப, சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மீது, நம்பிக்கை வைத்து காத்திருக்கின்றனர்.