புதுடில்லி: நாடு முழுவதும் ஊரடங்கு 3 வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் சிவப்பு , பச்சை, ஆரஞ்சு என வகைப்படுத்தப்பட்டு விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:
புதிய விதிமுறைகளின் பொது அம்சங்கள்
* விமானம், ரயில், மெட்ரோ ரயில் சேவைகளுக்கான தடை தொடரும். மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளவர்களுக்கு மட்டும் போக்குவரத்து சேவை கிடைக்கும்
* பள்ளி, கல்லுாரி உள்ளிட்ட எந்த கல்வி நிறுவனங்களும், வரும், 17 வரை, தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். ஓட்டல், சினிமா, ஷாப்பிங் மால், உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு அரங்கங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். விருந்தோம்பல் துறைக்கும் தடை நீடிக்கிறது
* சமூக, அரசியல், கலாசார நிகழ்ச்சிகள், மதம் சார்ந்த கூட்டு வழிபாடு ஆகியவற்றுக்கும் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது
* மக்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி, அத்தியாவசியமற்ற நடவடிக்கைகள், காலை, 7:00லிருந்து, மாலை, 7:00 மணி வரை தடை செய்யப்படுகின்றன
* அதிக அளவில் மக்கள் கூடுவதை தடை செய்யும், 144 தடை உத்தரவு, அமலில் இருக்கும்
* அனைத்து மண்டலங்களிலும், 65 வயதுக்கு மேற்பட்டோர், நோய் பாதிப்பு உள்ளோர், கர்ப்பிணி, 10 வயதுக்கும் குறைவான குழந்தைகள், உள்ளிட்டோர், மிக அத்தியவாசிய தேவைகளை தவிர, மற்ற நேரங்களில் கண்டிப்பாக வெளியில் வரக் கூடாது
* மருத்துவமனை புற நோயாளிகள் பிரிவு, கிளினிக் ஆகியவை அனைத்து மண்டலங்களிலும் செயல்படலாம். ஆனால், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில், இந்த சேவைகள், சமூக விலகல், முக கவசம் அணிவது போன்ற பாதுகாப்பு அம்சங்களுடன் செயல்பட வேண்டும்
* தனிமைப் படுத்தப்பட்ட பகுதிகளில், அத்தியாவசிய சேவைகள் தவிர, பிற சேவைகளுக்கு அனுமதியில்லை
* அத்தியாவசிய பொருட்களுக்கான சரக்கு போக்குவரத்து, மாநிலங்களுக்கு இடையே இயங்கலாம். இதற்கு, அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை

சிவப்பு மண்டலம்
* கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு மண்டலங்களில், சைக்கிள் ரிக் ஷா, ஆட்டோ, வாடகை கார், முடி திருத்தும் நிலையம், அழகு நிலையம், மாநிலங்களுக்கு இடையேயான பஸ் போக்குவரத்து ஆகியவற்றுக்கான தடை தொடரும்
* அனுமதி அளிக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு மட்டும், கார்களில் இரண்டு பேர் செல்ல அனுமதி உண்டு. டிரைவரையும் சேர்த்து, மூன்று பேர் செல்லலாம். இரு சக்கர வாகனங்களில் தனி நபர் மட்டும் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. பின் இருக்கையில், யாரும் செல்ல அனுமதி இல்லை; இதுவும், அனுமதி அளிக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு மட்டுமே பொருந்தும்
* மருந்து மற்றும் மருத்துவ உபரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், ஹார்டுவோர் பணியில் ஈடுபட்டுள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், சணல் தொழிற்சாலை ஆகியவை, சமூக விலகல் விதிமுறைகளுடன் செயல்படலாம்
* கட்டுமான தொழில்கள், குறைந்த தொழிலாளர்களுடன் செயல்படலாம். வேறு இடங்களில் இருந்து, தொழிலாளர்களை அழைத்து வரக் கூடாது
* குடியிருப்பு பகுதிகளில் தனித் தனியாக செயல்படும் அனைத்து கடைகளும் இயங்கலாம்
* இணைய வர்த்தக சேவை மூலம், அத்தியாவசிய பொருட்கள் விற்பனையில் மட்டுமே ஈடுபட வேண்டும். தனியார் நிறுவனங்கள், 33 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம்; மற்ற ஊழியர்களை வீட்டிலிருந்து பணி செய்ய அறிவுறுத்த வேண்டும்
* வங்கிகள், நிதி நிறுவனங்கள், காப்பீடு நிறுவனங்கள், மின்சாரம், தண்ணீர், தொலை தொடர்பு சேவைகள், தபால், கூரியர் ஆகியவை செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது
* அச்சு ஊடகங்கள், மின்னணு ஊடகங்கள், தகவல் தொழில்நுட்பம் தொடர்பான தொழில்கள், தனியார் பாதுகாப்பு நிறுவனங்களுக்கும், பிளம்பர், எலெக்ட்ரீஷியன் போன்ற சுய வேலை பார்ப்போர் ஆகியோருக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது


ஆரஞ்சு மண்டலம்
கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள ஆரஞ்சு மண்டலங்களில், வாடகை டாக்சிகள், ஒரு பயணியுடன் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. அனுமதி அளிக்கப்பட்ட நடவடிக்கைக்கு மட்டுமே இந்த தளர்வு பொருந்தும். மாவட்டங்களுக்கு இடையோன தனி நபர் நகர்வு மற்றும் வாகன இயக்கம் ஆகியவை, அனுமதி அளிக்கப்பட்ட நடவடிக்கைளுக்கு மட்டும் இயங்கலாம்
* கார்கள், டிரைவர் மற்றும் இரண்டு பயணியருடன் இயங்கலாம். இரு சக்கர வாகனங்களில், இருவர் பயணிக்க அனுமதி அளிக்கப்படுகிறது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE