புதுடில்லி : மஹாராஷ்டிராவில், வரும், 21ம் தேதி, எம்.எல்.சி., தேர்தல் நடத்தபடும் என, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, உத்தவ் தாக்கரே, முதல்வராக தொடர்வதில், சிக்கல் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
மஹாராஷ்டிராவில், கடந்த ஆண்டு நவ., 28ல், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்., கூட்டணி அரசு பதவியேற்றது. முதல்வராக, சிவசேனா தலைவர், உத்தவ் தாக்கரே பதவியேற்றார். ஆனால், அவர், எம்.எல்.ஏ.,வாகவோ, எம்.எல்.சி.,யாகவோ இல்லை. அரசியல் சாசனப்படி, முதல்வர் அல்லது அமைச்சராக பதவியேற்பவர்கள், ஆறு மாதங்களுக்குள், எம்.எல்.ஏ., அல்லது எம்.எல்.சி.,யாக தேர்வு பெற வேண்டும்.
அதன்படி, உத்தவ் தாக்கரே, மே, 27ம் தேதிக்குள், எம்.எல்.ஏ அல்லது எம்.எல்.சி.,யாக தேர்வு பெற வேண்டும். இல்லாவிடில், முதல்வர் பதவியிலிருந்து, அவர் விலக நேரிடும். மஹாராஷ்டிராவில், காலியாக உள்ள, ஒன்பது எம்.எல்.சி., இடங்கள், கடந்த, 24ம் தேதியுடன் காலியானது. இந்த இடங்களுக்கு தேர்தல் நடக்கும் போது, அதில் போட்டியிட்டு வெற்றி பெற, உத்தவ் தாக்கரே திட்டமிட்டு இருந்தார்.
'வீடியோ கான்பரன்ஸ்'
ஆனால், கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால், நாட்டில் தேர்தல் மற்றும் அரசியல் நடவடிக்கைகள் முடங்கியுள்ளன. இதனால், மஹாராஷ்டிராவில், எம்.எல்.சி., தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையில், கடந்த, 9ம் தேதி மும்பையில் நடந்த மஹாராஷ்டிரா அமைச்சரவை கூட்டத்தில், 'கவர்னருக்கு ஒதுக்கப்பட்டுள்ள, இரண்டு எம்.எல்.சி., இடங்களில், ஒரு இடத்தில் முதல்வர், உத்தவ் தாக்கரேவை நியமிக்க வேண்டும்' என, கவர்னர், கோஷ்யாரிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதோடு, மாநில அமைச்சர்கள், கவர்னரை நேரில் சந்தித்தும் கோரிக்கை விடுத்தனர்.இது பற்றி சட்ட வல்லுனர்களிடம் ஆலோசித்த கவர்னர், கோஷ்யாரி, மாநிலத்தில் காலியாக உள்ள, ஒன்பது, எம்.எல்.சி., இடங்களுக்கான தேர்தலை நடத்த, தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்து, நேற்று முன்தினம் கடிதம் அனுப்பினார்.
இதையடுத்து, அமெரிக்காவில் உள்ள தலைமை தேர்தல் கமிஷனர், சுனில் அரோராவுடன், டில்லியில் உள்ள தேர்தல் கமிஷனர்கள் அசோக் லவாசா, சுசில் சந்திரா, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக ஆலோசனை நடத்தினர். இதில், மே, 21ம் தேதி, மஹாராஷ்டிராவில், ஒன்பது எம்.எல்.சி., இடங்களுக்கான தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டது.
மாநில அரசு உறுதி:
இது பற்றி, தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மஹாராஷ்டிராவில், ஒன்பது எம்.எல்.சி., இடங்களுக்கான, வேட்பு மனு தாக்கல், வரும், 4ம் தேதி துவங்கும்; மனு தாக்கலுக்கு கடைசி நாள், 11ம் தேதி. 21ம் தேதி ஓட்டுப்பதிவு முடிந்த பின், மாலை, 4:00 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்கும்.நரசிம்மராவ், தேவ கவுடா ஆகியோர் பிரதமர்களாக இருந்த போதும், பல்வேறு மாநில முதல்வர்களுக்காகவும், இது போன்ற சூழ்நிலையில், இடைத்தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.
அதேபோல் தான், இப்போதும் நடத்தப்பட உள்ளது. இது தொடர்பாக, தேசிய மற்றும் மஹாராஷ்டிரா மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துக்களை, தேர்தல் கமிஷன் கவனத்தில் எடுத்துக் கொண்டது. சமூக விலகலை கடைப்பிடித்து, நோய் தொற்று பரவாமல், தேர்தலை நடத்த வேண்டிய பொறுப்பு, மாநில அரசுக்கு உள்ளது. அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க, மாநில அரசு உறுதியளித்து உள்ளது.
தேர்தலை சுமூகமாகவும், சமூக விலகலை கடைப்பிடித்து நடத்தப்படுவதை உறுதி செய்யவும், தனி அதிகாரி ஒருவரை, மத்திய உள்துறை செயலர் நியமிக்க வேண்டும். இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
60 ஆண்டுகள் நிறைவு:
எம்.எல்.சி., தேர்தல் நடக்க உள்ளதையடுத்து, முதல்வராக தொடர்வதில், உத்தவ் தாக்கரேவுக்கு ஏற்பட்டிருந்த சிக்கல் நீங்கியுள்ளது. இந்நிலையில், மஹாராஷ்டிரா மாநிலம் துவக்கப்பட்டு, நேற்றுடன், 60 ஆண்டுகள் நிறைவு பெற்றது. இதையொட்டி, மும்பையில், கவர்னர் மாளிகைக்கு சென்ற முதல்வர், உத்தவ் தாக்கரே, கவர்னர், கோஷ்யாரியை சந்தித்தார். மஹாராஷ்டிரா உதய தின வாழ்த்துக்களை, இருவரும் தெரிவித்துக் கொண்டனர்.