புதுடில்லி : ஊரடங்கால், சொந்த மாநிலங்களுக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் தொழிலாளர்களை, சிறப்பு ரயிலில் அனுப்பி வைக்கும் பணி, நேற்று துவங்கியது. தெலுங்கானாவிலிருந்து, 1,200 தொழிலாளர்களுடன், ஒடிசா மாநிலத்துக்கு, முதல் சிறப்பு ரயில் நேற்று புறப்பட்டது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, நாடு முழுதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பஸ், ரயில், விமான சேவை முடக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா, ஜார்க்கண்ட், பீஹார் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள், குஜராத், தமிழகம், தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில், கட்டுமான தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டிருந்தனர்.

வலியுறுத்தல்:
ஊரடங்கால், இவர்கள் சொந்த மாநிலத்துக்கு திரும்ப முடியாமல் தவித்து வந்தனர். வேலை பார்த்த மாநிலங்களிலேயே, முகாம்களில் தங்கியிருந்தனர். ஆனாலும், தங்கள் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும்படி தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வந்தனர். எதிர்க்கட்சிகளும் இந்த கோரிக்கையை வலியுறுத்தின. இதையடுத்து, சமூக விலகல் நடைமுறையைப் பின்பற்றி, தொழிலாளர்களை, அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும்படி, மாநில அரசுகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது.
இதன்படி, வெளி மாநில தொழிலாளர்களுக்கான முதல் சிறப்பு ரயில், தெலுங்கானா மாநிலம் லிங்கம் பள்ளியில் இருந்து, ஜார்க்கண்ட் மாநிலம் ஹாடியாவுக்கு நேற்று அதிகாலை புறப்பட்டது. இதில், 24 பெட்டிகளில், 1,200 தொழிலாளர்கள் பயணித்தனர். சமூக விலகல், முக கவசம் போன்ற பாதுகாப்பு நடைமுறைகளின் படி, இந்த தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதே போல, நேற்று மாலை கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் இருந்து, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், 12௦௦ பேர், சிறப்பு ரயில் மூலம், ஒடிசா புறப்பட்டு சென்றனர். ரயில்வே ஸ்டேஷனில் இருந்த அதிகாரிகள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு போலீசார், ரயில் புறப்பட்டதும், கைகளை தட்டி, தொழிலாளர்களை வழியனுப்பி வைத்தனர்.
இது குறித்து, தெற்கு மத்திய ரயில்வே வட்டாரங்கள் கூறியதாவது: இந்த ரயிலில், ஒரு பெட்டியில், 54 பயணியர் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த தொழிலாளர்கள் அனைவரும் ஜார்க்கண்டில் தனிமை முகாம்களில் வைக்கப்படுவர். 14 நாட்களுக்குப் பின், அங்கிருந்து அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர். தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் சிறப்பு ரயில்கள், இடையில் வேறு எந்த ரயில்வே ஸ்டேஷன்களிலும் நிறுத்தப்படாது. இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மாணவர்களுக்கு அனுமதி:
இதைத் தொடர்ந்து, மேலும் சில மாநிலங்களில் இருந்து, வெளி மாநில தொழிலாளர்கள், மாணவர்கள், யாத்ரீகர்கள் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்க, மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கும், ரயில்வே நிர்வாகத்துக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.