லக்னோ : உ.பியில் இளைஞர் ஒருவர் தனது திருமணத்திற்காக சைக்கிளில் 100 கி.மீ பயணம் செய்து திருணம் செய்து கொண்டு ஊர் திரும்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொரோனா வைரசின் தாக்கம் அதிகமாக இருப்பதால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் போக்குவரத்தும் முடங்கியது. உத்திரபிரதேசத்தின் ஹமீர்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கல்கு பிரஜாபதி (23). தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இவருக்கும் உ.பியின் மஹோபா மாவட்டம், புனியா கிராமத்தை சேர்ந்த ரிங்கி என்பவரும் திருமணம் செய்ய சில மாதங்களுக்கு முன்பே இருவீட்டார் சம்மதம் தெரிவித்து இருந்தனர். தொடர்ந்து, கொரோனா அச்சுறுத்தலால் தனது திருணம் எப்படி நடக்கும் என பிரஜாபதி குழப்பத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

நோய் அச்சுறுத்தலால் உறவினர்களை திருமணத்திற்கு அழைத்து செல்வது கடினம் என்பதால் தான் மட்டும் சைக்கிளில் செல்ல முடிவு செய்தார். தனது கிராமத்தில் இருந்து 100 கி.மீ பயணம் செய்து புனியா கிராமத்தில் ஒரு கோவிலில் ரிங்கிக்கும் பிரஜாபதிக்கும் திருமணம் நடந்தது. இது தொடர்பாக பிரஜாபதி கூறுகையில், ஊரடங்கு காரணமாக எந்தவொரு முடிவையும் சிந்திக்க இயலாத நிலைமை. உறவினர்களையும் அழைத்து செல்ல முடியாததால் தான் மட்டும் சென்று திருணம் செய்து கொண்டேன். பின் ஊரடங்கு முடிந்ததும் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தலாம் என இருக்கிறேன்.
திருமணம் முடிந்து என் மனைவியை சைக்கிளில் அமரவைத்து அழுத்தி கொண்டே என் வீட்டிற்கு வந்துவிட்டேன். அவ்வளவுதூரம் சைக்கிள் ஓட்டியதால் கால்கள் கடுமையாக வலிக்கிறது. ஆயினும் மாத்திரைகள் எடுத்துக்கொண்டதால் பரவாயில்லை. இவ்வாறு கூறினார்.