புதுச்சேரி:''என் மீது,சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்ய, கவர்னர் கிரண் பேடி முயற்சித்து வருகிறார்,'' என, புதுச்சேரி சுற்றுலா துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறினார்.
அவரது பேட்டி:புதுச்சேரி கவர்னர் கிரண்பேடிக்கு, 1994ல் மகசேசே விருது வழங்கப்பட்டது. அப்போது, வழங்கிய பணத்தை, ஒரு தொண்டு நிறுவனத்திற்கு வழங்குவதாக அறிவித்தார். ஆனால், இன்றுவரை அந்த பணம், அந்த தொண்டு நிறுவனத்திற்குச் செல்லவில்லை. மிசோரமில், அவர் போலீஸ் அதிகாரியாக பணிபுரிந்தபோது, அம்மாநில மருத்துவக் கல்லுாரியில், அம்மாநில மக்களுக்கான இட ஒதுக்கீட்டில், தன் மகளுக்கு, எம்.பி.பி.எஸ்., 'சீட்' வாங்கினார்.

அவரது மகளும், படிப்பை முடிக்காமல் விட்டு விட்டார். மிசோரம் மக்களுக்கு கிடைக்க வேண்டிய சீட்டையும் பறித்ததுடன், மகளையும் படிக்க வைக்காமல், ஒரு மருத்துவ சீட்டையே வீணடித்து விட்டார்.கடந்த, 1993ல் சிறை அதிகாரியாக பணிபுரிந்தபோது, வெளிநாட்டினரை சிறைக்குள் அழைத்துச் சென்றார். இதனால், அவரது மேல் அதிகாரி, 'பெரிய பதவிகள் எதையும் இவருக்கு வழங்கக் கூடாது' என, பரிந்துரைத்துள்ளார்.
விமானத்தில் சாதாரண வகுப்பில் பயணம் செய்து, சொகுசு வகுப்பில் பயணம் செய்ததற்கான டிக்கெட் பணத்தை பெற்றுக் கொண்டார்.சேவை புரிவதற்காக புதுச்சேரிக்கு வந்துள்ளதாக கூறும் கவர்னர், ஓய்வூதியமாக கிடைக்கும், 60 ஆயிரத்தை பெற்று கொள்ளாமல், கவர்னர் சம்பளம், 3.50 லட்சம் ரூபாயை பெறுவது ஏன்?
என் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்ய முயற்சித்து வருகிறார். நான் தவறாக சம்பாதித்தால் தானே வழக்கு பதிவு செய்ய முடியும். என் மீது கூறும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்துள்ளேன்.அதுபோல், அவர் மீது நான் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.