கோவை : தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து கோவை வருபவர்களால், 'கொரோனா' பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு, பிரதான சாலைகளில் சோதனை சாவடிகள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று(மே 2) முதல் ஆய்வுக்கு பின்பே அனுமதிக்கப்படவுள்ளனர்.
ஊரடங்கு காரணத்தால், நாடு முழுவதும் போக்குவரத்து அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இறப்பு, மருத்துவ சிகிச்சை, பிரசவம், உள்ளிட்ட காரணங்கள் கூறி பிற மாநிலங்கள், மாவட்டங்களிலிருந்து கோவைக்கும், கோவையிலிருந்து பிற பகுதிகளுக்கும் சொந்த வாகனங்கள் மூலம் பலர் வந்து செல்கின்றனர்.
தற்போது, தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்று பிற மாவட்டங்களில் இருந்து வருபவர்களால், கோவையில் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கலெக்டர் ராஜாமணி கூறுகையில்,''கோவை மாவட்டத்தில், ஆரம்ப கட்டத்திலேயே கேரளா உள்ளிட்ட பிற மாநில எல்லைகள் மூடப்பட்டன. தற்போது, பிற மாவட்டங்களில் இருந்து கோவைக்கு வரும் அனைத்து பிரதான சாலைகளிலும் சோதனை சாவடிகள் அமைக்கவுள்ளோம். இன்று முதல், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் ஆய்வுக்கு பின்பே அனுமதிக்கப்படுவர்.
பிற பகுதிகளில் இருந்து வருபவர்கள், 14 நாட்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டியது அவசியம். பிற மாவட்டங்களுக்கு சென்று வருபவர்கள் மாவட்ட கட்டுப்பாட்டு மையம் (1077) அல்லது சுகாதாரத்துறைக்கு தகவல் அளிக்கவேண்டியது கட்டாயம்,'' என்றார்.