'கடந்த, 50 ஆண்டுகளாக, நாம் ஒரு வளரும் நாடாகவே இருந்து வருகிறோம். இந்தியா வளரும் நாடு அல்ல; அது, வளர்ந்த நாடுகளில் ஒன்று என, உலகுக்கு உணர்த்துவதில், நான் மகிழ்ச்சி அடைகிறேன்...'- இப்படி கூறியவர் யார் தெரியுமா? தன் வாழ்நாள் முழுதும், இந்தியா வல்லரசாக வேண்டும் என்று சொல்லி சொல்லி, அதற்காகவே உழைத்தவர்; நம்மையும் கனவு காண சொன்ன, அணு விஞ்ஞானியும், முன்னாள் ஜனாதிபதியுமான, ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தான்.
அணு ஆயுத வலிமைஅணுவியல் சோதனை மட்டுமல்லாமல், 'அக்னி' மற்றும் 'பிருத்வி' ஏவுகணைகள் உருவாக்கியது, விண்வெளி ஆராய்ச்சியில் உச்சம் தொட்டு, எஸ்.எல்.வி., ராக்கெட்டுகளை தயாரித்தது என, வளர்ந்த நாடுகளுக்கு சமமாக, இந்தியாவை கொண்டு சென்ற பெருமை, இவரையே சாரும்.'அடிப்படை வசதிகளுக்கே நாம் தடுமாறிக் கொண்டிருக்கும் போது, இந்தியா, அணு ஆயுத வலிமை கொண்ட நாடு என்று பெயர் எடுத்து, என்ன சாதித்து விடப் போகிறது...' என்று, ஒருமுறை கலாமிடம் கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு அவர், 'நாம் எந்த நாட்டையும் கைப்பற்றவில்லை; எந்த நாட்டையும் சீரழிக்கவில்லை.
அண்டை நாடுகள், அணு ஆயுதங்களோடு நம்மை மிரட்டும் போது, அதற்கு ஈடு கொடுக்க வேண்டாமா; அதற்காக தான்...' என்று பதிலளித்தார்.நம், 3,000 ஆண்டு கால வரலாற்றை புரட்டி பார்த்தால், மாவீரன் அலெக்சாண்டர் துவங்கி, துருக்கியர், முகலாயர் மற்றும் போர்ச்சுக்கீசியர் என, ஒருவர் பின் ஒருவராக, நம் நாட்டின் மீது படையெடுத்து, நம் விலை மதிப்பற்ற பொக்கிஷங்களையும், அறிவு செல்வங்களையும், தமதாக்கிக் கொண்டனர்.ஆனால், மற்ற நாடுகளிடம், நாம் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. மற்றவர்களின் உரிமையை நாம் மதிப்பது தான் இதற்கு காரணம்.
ஒரு கட்டத்தில், எல்லாவற்றையும் இழந்து, நிராயுதபாணியாக நின்ற போதும், இந்த மண்ணின் மகத்துவமும், நம் ரத்தத்தில் ஊறிப்போன முன்னோர்களின் அறிவு செல்களும், நம்மை இழப்பில் இருந்து மீட்டெடுத்தன.அடுத்து, ஆங்கிலேயர்களின் ஆக்கிரமிப்பில், அடிமைகளாக, சுயமரியாதை இழந்த போதும், நம்முள் விதைக்கப்பட்ட வீர உணர்வு சிலிர்த்தெழுந்து, சுதந்திர வேள்வியாக வெளிப்பட்டது. சுதந்திரம் கிடைத்தும், ஆங்கிலேயர்களின் சுரண்டல்களால், திக்கற்றவர்களாக, வறுமையின் பிடிக்குள் சென்றோம்; அப்போதும் நாம் முடங்கி போகவில்லை.
அமெரிக்காவின், அணுகுண்டு வீச்சுக்கு பின், புத்துயிர் பெற்ற, ஜப்பானியர்களின் உழைப்புடன் ஒப்பிடும் போது, நாம் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்தோம்.ஒரு காலத்தில், இந்தியா என்றால், பிச்சைக்காரர்கள், சாமியார்கள் மற்றும் பாம்பாட்டிகள் நிறைந்த நாடு என்று வெளிநாட்டினர் கருதி வந்தனர். சுவாமி விவேகானந்தரின், அமெரிக்காவின், சிகாகோ நகர் சொற்பொழிவுக்கு பின், அந்த, 'இமேஜ்' மாறியது.'ஓ... இவர்களிடம் ஏதோ விஷயம் இருக்கிறது...' என்று நினைக்க வைத்தது.வீழ்ந்து விடவில்லைஇயற்கை பேரிடர், அண்டை நாடுகளுடனான யுத்தம், உள் நாட்டு கலவரம், வேலையில்லா திண்டாட்டம் மற்றும் தொழில்நுட்ப குறைபாடு போன்ற, பல நெருக்கடிகள், நம் கழுத்தை நெரித்த போதும், வீழ்ந்து விடவில்லை.
வீழ்வது எழுவதற்கே என்ற தாரக மந்திரத்தை, உலகுக்கு கற்றுக் கொடுத்தவர்கள் அல்லவா நாம்.ஆட்சியாளர்களுடன், மக்களாகிய நாமும் கைக்கோர்த்தோம். இடையூறுகளும், தடங்கல் களும் தான் ஒருவனை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லும் என்ற பொன்மொழிக் கேற்ப, மக்கள் சக்தியால், ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்கு அடித்தளமிட்டோம். இவ்வளவு துாரம் கடந்து வந்த நாம், எதிர்பாராமல் நம்மீது தொடுக்கப்பட்ட நோய் தொற்று எனும் போரை எதிர்கொள்ள மாட்டோமா?சமீபத்திய சோதனை காலம், நமக்கு பல நல்ல பாடங்களை, விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
நம் அணுகுமுறையும், பாரம்பரிய மருத்துவ முறைகளும், வெளி உலகத்தினரின் கவனத்தை, நம் மீது திருப்பச் செய்துள்ளது.நம் ஒற்றுமையின் பலத்தை, கைத்தட்டியும், வீட்டுக்கு வீடு விளக்கேற்றியும் நிரூபித்துள்ளோம். அதே ஒத்துழைப்பை தொடர்ந்து அளித்து, பொருளாதார சரிவிலிருந்தும் இந்தியாவை மீட்டெடுக்க தோள் கொடுப்போம்.தேர்தல் வரும் போது, ஓட்டு போட்டு விட்டு, அத்துடன் கடமை முடிந்தது என்று இருந்து விடுகிறோம். நாம் உருப்படியாக எதையும் செய்யாமல், நமக்கு தேவையான அனைத்தையும், அரசே செய்ய வேண்டும் என்ற மனப்போக்கை கைவிட்டாலே, நாட்டுக்கு நாம் செய்யும் மிகப் பெரிய உதவி! '
சரி போனது போகட்டும்... சமீபத்தில், 'லாக் டவுன்' எவ்வளவு பெரிய மாற்றத்துக்கு அடித்தளமிட்டிருக்கிறது தெரியுமா... நாம் செல்ல வேண்டிய பாதை எது, நம் இலக்கு என்ன மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பவைகளை களைவதற்கான அவசியம் ஆகியவற்றை புரிய வைத்துள்ளது.இந்தியாவின் பொக்கிஷமாக கருதப்படும், அனைத்து விஷயங்களும் புத்துயிர் பெற்றுள்ளன. இழந்தவற்றை ஈடு செய்யும் பணியில், அரசுடன் நாமும் ஈடுபடுத்திக் கொள்வது தான், இப்போது நாம் செய்ய வேண்டிய முக்கிய பணி.சுகாதாரம் பேணுவதுஒரு குடும்பத்தில், வருமானம் குறையும் போதோ, நோய் தாக்கத்தால், குடும்ப உறுப்பினர் யாராவது பாதிக்கப்படும் போதோ, நாம் எப்படி செயல்படுவோமோ, அதே மனநிலையுடன், நாட்டுக்காக, நம் எதிர்காலத்துக்காக செயலாற்ற வேண்டிய தருணம் இது.இந்தியா வல்லரசாக, 10 அம்ச திட்டம் ஒன்றை தயாரித்து அளித்திருந்தார், அப்துல் கலாம்.
அதில், வளர்ந்த நாடுகளுக்கு சமமாக, சுத்தம் - சுகாதாரம் பேணுவது, கல்வி, மருத்துவத்துறை மேன்மையடைவது, நகரம் போல், கிராமமும், சமூக - பொருளாதாரத்தில் வளர்ச்சி காணுவது, மக்கள் வாழ்க்கை தரம் உயர வேண்டும் போன்ற பல திட்டங்களை வகுத்து கொடுத்துள்ளார்.நம் பிரதமரின் உரைகளை உற்று கவனித்துப் பாருங்கள். அவரது ஒவ்வொரு உரையிலும், கலாமின் எண்ணங்களை பிரதிபலிப்பதாகவே அமைந்திருக்கும்.இன்று, கல்வி - மருத்துவம் உட்பட பல துறைகள், 'டிஜிட்டல்' உலகத்தை நோக்கி பயணப்பட்டு இருக்கிறது.
'டிஜிட்டல் இந்தியா' மட்டுமல்ல, 'மேக் இன் இந்தியா' என்ற கோட்பாடும், செயல்முறைக்கு வந்துள்ளது.வானிலை அறிஞர் ஆரியபட்டா, அறுவை சிகிச்சை முறையை கண்டுபிடித்த, சுஷ்ருதர், ஜி.டி.நாயுடு, விஸ்வேஸ்வரய்யா போன்ற மாமேதைகள் வழியில், இளம் தலைமுறையினர், புதுப்புது கண்டுபிடிப்புகளை உருவாக்குவதில், வெற்றி கண்டு வருவதை காண முடிகிறது.வளர்ச்சி பாதை என்பது, பூக்கள் துாவப்பட்ட மென்மையான பாதை அல்ல; அது கல்லும், முள்ளும் நிறைந்த கடின பாதை. நாம் மனது வைத்தால், எதிர்மறை எண்ணங்களை களைந்து, நம் பங்களிப்பை அளித்தால், சுயநலமில்லாத உழைப்பை வழங்கினால், நிச்சயம் நாம் பிறந்த, இந்திய திருநாட்டை, முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லலாம்.
சுயசார்பே சுயமரியாதையை பெற்றுத் தரும்.நம் ஆன்மிக, கலாசார பலம், நம் பாரம்பரியம் மற்றும் நம் ஆற்றல் என்ன என்று உலகுக்கு காட்ட வேண்டிய சரியான சந்தர்ப்பம் இது.அரசின் அதிகாரமும், மக்கள் சக்தியும் ஒன்று சேரும் போது, வியத்தகு வளர்ச்சியை நிச்சயம் காண முடியும்.ஒருமுறை, ஐதராபாத் நகரில் நடைபெற்ற கூட்டத்தில், அப்துல் கலாம் உரையாடிய போது, 14 வயது சிறுமி, கலாமிடம், 'ஆட்டோகிராப்' வாங்க வந்துள்ளார். அச்சிறுமியிடம், 'வாழ்க்கையில் உன் குறிக்கோள் என்ன' என்று கேட்டுள்ளார், கலாம். அதற்கு அந்த சிறுமி, 'வளர்ச்சி அடைந்த இந்தியாவில் வாழ விரும்புகிறேன்' என்று பதில் கூறியுள்ளார், அச்சிறுமி.
அவளுக்காகவும், கலாமின் கனவு நனவாகவும், நமக்காகவும், வரும் சந்ததியினருக்காகவும், நாம் ஒன்று சேர்ந்து, உழைக்க வேண்டிய காலம் இது. 2020ல் வல்லரசாக ஆவோமா என, மதில் மேல் பூனையாக தவிக்காமல், இந்தியா வளர்ச்சியடைந்த நாடு என்று, உரக்க பிரகடனப்படுத்த, 130 கோடி மக்களும் கைக்கோர்ப்போம்.வழித்துணைபுத்தரும், போதி தருமரும் இல்லாவிட்டால், கிழக்காசிய நாடுகளுக்கு கலாசாரமும், வரலாறும் இல்லை.அதேபோல், ராஜராஜ சோழனின், போர் தந்திரத்தையும், யுக்தியையும் பயன்படுத்தாமல் இருந்திருந்தால், வியட்நாம் நாட்டினரால், அமெரிக்காவுக்கு எதிரான போரில், வெற்றி பெற்றிருக்க முடியாது.வாழ்வாங்கு வாழ சொன்ன வள்ளுவரும், கம்பரும், இன்று இல்லாமல் இருக்கலாம்.
ஆனால், அவர்கள் படைத்த குறளும், ராமாயணமும், இன்றும் நமக்கு வழித்துணையாக உள்ளன. சின்ன சின்ன துவக்கம் தான், பெரிய வெற்றிக்கு அடிப்படை. முயன்றால் முடியாத தல்ல. கலாமின் கனவுப்படி, இதோ இந்த, 2020ம் ஆண்டிலேயே, நாடு வல்லரசாக, நம் பங்களிப்பை அளிப்போம்.வரும் அக்டோபர், 15ல், கலாமின் பிறந்த நாளுக்கு, நாம் கொடுக்கும் மிகப் பெரிய பரிசு, இதுவாக தான் இருக்க வேண்டும்!
புவனா வேதா
சமூக ஆர்வலர்
தொடர்புக்கு: bvedamnv@gmail.com