புதுடில்லி: கொரோனா பரவலால் எதிர்க்கட்சியினர் அதிகமாக அரசியல் செய்ய முடியாத நிலை. 'இந்த இக்கட்டான சூழ்நிலையில், அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு தருகிறோம்' என, ராகுல் சொல்லி வந்தாலும், அவர், தினமும், பிரதமர் மோடியை விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில், விரைவில் எதிர்க்கட்சியினர், குறிப்பாக காங்., கட்சியினர், ஒரு பெரும் பிரச்னையை எழுப்ப வாய்ப்புள்ளது என்கின்றனர் சீனியர் அதிகாரிகள். புதிய பார்லி., வளாகம் கட்ட, மோடி அரசு முடிவு செய்துள்ளது. இந்த வளாகத்தில், பார்லிமென்ட், மத்திய அரசு அலுலவகங்கள் என, அனைத்தும் இருக்கும். இந்தத் திட்டம், 20 ஆயிரம் கோடி ரூபாயில், நான்கு ஆண்டுகளில் நிறைவேற்றப்படும் என, சொல்லப்படுகிறது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால், இத்திட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்கவில்லை.

இதற்கிடையே, டில்லியில், சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட, முன்னாள் பிரதமர் இந்திராவின் வீடு, இப்போது நினைவகமாக உள்ளது. அதில், அவர் பயன்படுத்திய பொருட்கள், புகைப்படங்கள் உள்ளன. 'மிகப்பெரிய நிலப்பரப்பில் இருக்கும் இந்த நினைகத்திற்கு, இவ்வளவு இடம் தேவையில்லை; அவசியமான இடத்தை மட்டும் வைத்துக்கொண்டு மீதி இடத்தை, புதிய பார்லி., வளாகத்திற்கு விட்டுத் தர வேண்டும்' என, அரசு தரப்பில் சொல்லப்படுகிறது. இதனால் எதிர்க்கட்சியினர் தரப்பில் இருந்து பிரச்னை வரும் என சொல்லப்படுகிறது.

'நினைவகத்தில் கை வைக்கவில்லை; தேவைக்கும் அதிகமாக இருக்கும் இடத்தை தான் எடுத்துக் கொள்ளப் போகிறோம்' என, அரசு தரப்பில் சொல்லப்படுகிறது. ஆனால், இந்த நினைவகத்தில் இருந்த, இந்திரா பயன்படுத்திய பல பொருட்களை, அவருடைய பேத்தி, பிரியங்கா ஏற்கனவே எடுத்துச் சென்றுவிட்டார்; அங்கு இருப்பது, 'டூப்ளிகேட்' பொருட்கள் எனவும் சொல்லப்படுகிறது. இருந்தாலும், இந்த விஷயம் பெரும் எதிர்ப்பை கிளப்பும் என்பது மட்டும் நிச்சயம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE