போபால் : ம.பி.,க்குள் நுழைய அனுமதி மறுத்ததை கண்டித்து ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நடந்த கல்வீச்சில் 3 போலீசார் காயமடைந்தனர்.

கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், வெளிமாநிலங்களில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்ப மத்திய அரசு சிறப்பு அனுமதி அளித்தது. ம.பி.,யில் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான அரசு, வெவ்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள ம.பி.,யை சேர்ந்த தொழிலாளர்களை மீண்டும் வீட்டிற்குதிரும்புவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க 7 சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொண்ட குழுவை நியமித்திருந்தது.

இந்நிலையில் பர்வானி மாவட்ட எல்லையை ஒட்டிய பகுதியில் கடந்த சில நாட்களாக போராட்டம் அதிகரித்து வருகிறது. ம.பி உடனான எல்லையை உ.பி. அரசு மூடியதை அடுத்து நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பர்வானி மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்தியது. பீஹார், ராஜஸ்தான் மற்றும் உ.பி.,யை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள்ஒன்றிணைந்து, பிஜாசன் எல்லையில் போலீசார் அனுமதி மறுத்ததை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்களை வீட்டிற்கு அனுப்புவதற்கு வழி இல்லையெனில் சொந்தமாக செல்ல அனுமதிக்குமாறு தொழிலாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தனிமைப்படுத்தப்பட்ட வசதிகளிலும் தங்குவதற்கு மறுத்துள்ளனர். கொரோனா பரவாமல் கட்டுப்படுத்த அறிவுறுத்தப்பட்ட அனைத்து சமூக இடைவெளி நடைமுறைகளை கண்டுகொள்ளாமல் எல்லையில் தொழிலாளர்கள் ஒருவரோடு ஒருவர் நெருக்கமாக இருந்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசாருடன் விரைந்த கலெக்டர் அமித் தோமர், தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பரிசோதனைக்கு பின் செல்ல அனுமதிப்பதாக கூறியுள்ளார். தொழிலாளர்களுக்கும் தேவையான உணவு ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE