வாஷிங்டன் :'கொரோனா' வைரஸ் பாதிப்பால் கடுமையாக திணறிவரும், அமெரிக்காவில், ஒரே நாளில், 34 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உள்ளது உறுதியாகி உள்ளது.இந்த நிலையில், 'ஒரு லட்சம் பேர் உயிரிழப்பர்' என, அதிபர், டொனால்டு டிரம்ப், புதிய கணிப்பை வெளியிட்டுள்ளார்.
டிரம்ப் கூறியதாவது: கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, சரியான நடவடிக்கை எடுக்காவிட்டால், நம் நாட்டில், 22 லட்சம் பேர் இறப்பர் எனக் கூறினர். ஆனால், நம் அரசு எடுத்த கடும் நடவடிக்கைகளால், லட்சக்கணக்கானோர் உயிரைக் காப்பாற்றியுள்ளோம். அதிகபட்சம், ஒரு லட்சம் பேர் உயிரிழப்பர் என, நினைக்கிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.

அமெரிக்காவில் கட்டுப்பாடுகள் பரவலாக தளர்த்தப்பட்டாலும், பல மாகாணங்களில், கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. வைரஸ் வேகமாக பரவி வருவதால், கலிபோர்னியா, மிச்சிகன் ஆகியவை, கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளன. வரும், 15ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மிதமான வெப்பநிலை நிலவுவதால், கட்டுப்பாடுகளை மீறி, மக்கள் சாலையில் குவிவர் என்ற அச்சத்தில், நியூயார்க் நகரில், சமூக விலகல், முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதைக் கண்காணிக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கட்டுப்பாடுகளை தளர்த்தக் கோரி, ஓரேகானில், பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.