பொள்ளாச்சி:அரசின் கட்டுமான பணிகளை மேற்கொள்ள, பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இதை கடைபிடித்து, பணிகளை தொடர்வது நடைமுறையில் சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.பொள்ளாச்சி நகராட்சி, நெடுஞ்சாலைகள், ஊராட்சிகளில் அத்தியாவசியம் கருதி கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அரசு மேற்கொண்டுள்ளது.கோவை நான்கு வழிச்சாலை, பாலக்காடு ரோடு ரயில்வே பாலம், உடுமலை ரோடு லிப்ட் மேம்பாலம், நகரில் பாதாள சாக்கடை திட்டம், கிராமங்களை இணைக்கும் ஒன்றிய ரோடு பணிகள் நடந்தன.இந்நிலையில், திடீரென ஏற்பட்ட கொரோனா பரவல், ஊரடங்கு உத்தரவு ஆகியவற்றதால், வளர்ச்சி திட்ட கட்டுமான பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.இந்நிலையில், வளர்ச்சி திட்டங்களில் முக்கியத்துவம் கருதி, கட்டுமான பணிகளை தொடர அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்துள்ளது.அரசு அறிவுறுத்தலில் கூறியிருப்பதாவது:கொரோனா பரவல் தீவிரமாக உள்ள பகுதிகளில் பணிகள் துவங்க கூடாது. நெடுந்தொலைவு செல்லும் வழித்தடமாக உள்ள ரோடுகளில் நடக்கும் கட்டுமானங்கள், நிறைவடையும் நிலையில் உள்ள பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து மேற்கொள்ளலாம்.பணிகளை மாவட்ட கலெக்டர் தேர்வு செய்து அனுமதி கொடுக்க வேண்டும். கலெக்டர் ஒப்புதல் இன்றி பணி துவங்க கூடாது.உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் நோக்கில், அந்தந்த பகுதியில் இருந்து தொழிலாளர்களை பணியில் அமர்த்த வேண்டும்.சம்பந்தப்பட்ட துறை பொறியாளர்கள் கண்காணிப்பில், ஒப்பந்ததாரர்கள் பணியை மேற்கொள்ள வேண்டும். அதுவும், சிறு, சிறு பணிகளை மட்டுமே ஆரம்பத்தில் துவங்க வேண்டும்.தொழிலாளர்களிடையே, கொரோனா தொற்று, பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து தீவிரமாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தொழிலாளர்களுக்கு முகக்கவசம் வழங்கி, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். பணித்தளத்தில் சோப் மற்றும் தண்ணீர் வழங்கி, கை கழுவும் வசதி ஏற்படுத்த வேண்டும்.தொழிலாளர்களை வாகனங்களில் கூட்டமாக அழைத்து வரக்கூடாது. உணவு, குடிநீரை பகிர்ந்து கொள்ள அனுமதிக்கக்கூடாது.பணியாளர்கள் விபரங்கள் அடங்கிய பட்டியலை தயாரித்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும்.தொழிலாளர்களில் யாருக்காவது, இருமல், சளி, லேசான காய்ச்சல் இருந்தாலே அவர்களை தனிமைப்படுத்தி, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், அவர்களுடன் பணியாற்றிய அனைத்து தொழிலாளர்களையும் தனிமைப்படுத்தி கண்காணிக்க வேண்டும்.ரத்த அழுத்தம், இருதய, சிறுநீரக பிரச்னைகள், சர்க்கரை நோய் இருப்பவர்களை கண்டிப்பாக பணியில் ஈடுபடுத்தக்கூடாது. குறிப்பாக, 55 வயதுக்கு மேற்பட்டவர்களை பணியில் வைக்க கூடாது.இவை அனைத்தும் தவறாமல் கடைபிடிக்கப்படுவதை, ஒப்பந்ததாரர் சொந்த பொறுப்பில் உறுதிப்படுத்த வேண்டும். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, திட்ட பணிகளை ஒப்பந்ததாரர்கள் தொடரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த வழிமுறைகளை பயன்படுத்தி, பணிகளை மேற்கொள்வது நடைமுறையில் சாத்தியமா என ஒப்பந்ததாரர்களிடையே அச்சம் உருவாகியுள்ளது. அதே சமயம், பல கோடி ரூபாய் தொகையை பணிகளில் முடக்கியுள்ள நிலையில் ஒப்பந்ததாரர்கள் திணறுகின்றனர். எனவே, வளர்ச்சி திட்ட பணிகள் கொரோனா வீரியம் விலகும் வரை, தேக்கத்தையும், முடக்கத்தையும் சந்திக்கும் என்பதே உண்மை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE