திருவனந்தபுரம்: கொரோனா பரிசோதனை இன்றி வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது ஆபத்து நிறைந்தது என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

மே 7 முதல் பல்வேறு நாடுகளில் சிக்கியுள்ள 15 ஆயிரம் இந்தியர்களை மீட்க 64 சிறப்பு விமானங்களை இயக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. முன்னதாக வெளிநாடுகளில் இருந்து திரும்புவோரை கட்டாய பரிசோதனைக்கு பின், தங்களது வீடுகளுக்கு சென்று இரு வாரங்களுக்கு தனிமைப்படுத்தி கொள்ள கேரள அரசு திட்டமிட்டிருந்தது. தற்போது பெரும்பாலானோர் கொரோனா பரிசோதனை இன்றி விமானத்தில் புறப்பட்டு வர இருப்பதாக வந்த தகவலை அடுத்து தனது நிலையை மாற்றியுள்ளது. கொரோனா தொற்று இல்லை என சான்றிதழ் பெற்றவர்களை மட்டுமே அழைத்து வர வேண்டுமென கேரள அரசு வலியுறுத்தி உள்ளது.
மத்திய அரசு, தற்போதைய சூழலில் சோதனைக்கு பிறகு அனைவரையும் அனுமதிப்பது கடினம் எனவும், கப்பல் அல்லது விமானம் புறப்படும் நேரத்தில் பயணிகளுக்கு சுகாதார நெறிமுறைப்படி தெர்மல் சோதனை நடத்தப்படும். கொரோனா அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவரென கூறியுள்ளது.
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பினராயி விஜயன், வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்புவோரில் பெரும்பாலானோர் கொரோனா பரிசோதனை இன்றி வருகின்றனர். எனவே இந்த நேரத்தில் நாம் ரிஸ்க் எடுக்க முடியாது. விமானத்தில் ஏற்றுவதற்கு முன் சோதனை நடத்தப்பட்டால் சிறந்ததாக இருக்கும். ஒவ்வொரு விமானத்திலும் சுமார் 200 பயணிகள் வருகை தருவர். அதில் ஒன்று அல்லது இரண்டு பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தால் , மற்றவர்களும் கொரோனாவால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.
சர்வதேச அளவில் ஒப்புகொள்ளப்பட்ட சுகாதார நெறிமுறைகளை பின்பற்றுவதில் எந்த குறைகளும் இருக்க கூடாது. தவறினால் கேரள அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கை பலத்த அடியாக இருக்குமெனவும், பயணத்தின் போது முகக் கவசம் , சுகாதாரத்தை பேண வேண்டும். இது தவிர மருத்துவமனையில் 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும். அதற்கான செலவை அவர்களே ஏற்க வேண்டுமென பினராயி வலியுறுத்தி உள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்ப சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாகவும், அனைவரையும் திரும்ப அழைத்து வருவது சாத்தியமில்லை என மத்திய அரசு தெளிவுப்படுத்த வேண்டுமென்றும், வேலையிழந்த புலம்பெயர் தொழிலாளர்கள், விசா காலம் முடிவோர், கர்ப்பிணிகள், வயதான மற்றும் உறவினர் மரணத்தால் நாடு திரும்புவோருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுகொண்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE