ஐதராபாத்: ஊரடங்கால் தெலுங்கானா மாநிலத்தில் நிதி சிக்கல் ஏற்பட்டதாக கூறி, நிதியை கொடுங்கள் அல்லது அதிகாரத்தை கொடுங்கள் என மத்திய அரசிடம் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் கோரியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தற்போது 3வது கட்டமாக மே 17 வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது. பல நாட்களாக அனைத்து வர்த்தகமும் முடங்கியுள்ளதால் மாநில அரசுகள் வருவாய் இன்றி தவித்து வருகின்றன. பல தொழிலாளர்களும் வேலையின்றி தவிக்கின்றனர்.
ஊரடங்கால் மாநிலத்திற்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகளை சமாளிப்பது குறித்து தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

மத்திய அரசு தவறான கொள்கைகளை பின்பற்றி நடந்து கொள்ளும் விதம் உண்மையில் எனக்கு வேதனையாக இருக்கிறது. மத்திய அரசின் செயல்பாட்டுக்கு இந்த தேசம் மிகப்பெரிய விலை கொடுக்கப்போகிறது என எச்சரிக்கிறேன். கொரோனா தொற்றால் நாட்டில் பொருளாதாரம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா அரசின் மாத வருவாய் ரூ.17 ஆயிரம் கோடியிலிருந்து ரூ.1,600 கோடியாக சரிந்துவிட்டது. பிரதமர் மோடியுடன் வீடியோ கான்பரன்சிங்கின் போது, பல்வேறு விஷயங்களை தெளிவாக எடுத்துரைத்தேன். மத்திய அரசிடம் பரந்த நிதிக்கொள்கை இருக்கிறது, அதிகாரம் இருக்கிறது. எனவே, மாநிலங்களுக்கு நிதியை வழங்கிடுங்கள், அல்லது அதிகாரத்தை வழங்கிடுங்கள். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்றேன்.

உலகமய கொள்கையுடன் இருப்பதால், மாநிலங்கள் சுயமாக நிதியை பெருக்கிக் கொள்வதற்கான வழிகளையும் தெரிவித்தேன். ஆனால், எந்தவிதமான பதிலும் பிரதமரிடம் இருந்து வரவில்லை. மாநிலங்களுக்கான நிதிப்பொறுப்பு பட்ஜெட் மேலாண்மை மீது கடன் பெறும் அளவை உயர்த்துங்கள், மத்திய அரசு எதையும் பொறுப்பேற்க வேண்டாம் என்றேன். எங்களுக்கு கடன் இருக்கிறது அதை செலுத்தும் காலத்தை ஒத்திவையுங்கள் என்றேன். அதற்கும் பதில் இல்லை. மாநிலங்களுக்கு இருக்கும் கடனால் மத்திய அரசுக்கு என்ன சுமை வந்துவிடப்போகிறது என்பது எனக்குப்புரியவில்லை. மத்திய அரசின் கொள்கை என்ன என்பது எனக்கு புரியவில்லை.
இன்னும் சிறிது காலம் பொறுமையாக இருப்பேன், அப்போதும் எதுவும் நடக்காவிட்டால், தெலுங்கானா சார்பில் கடுமையான எதிர்ப்புக் கிளம்பும். புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலம் செல்ல அவர்களை கட்டணம் செலுத்த மத்திய அரசு சொல்கிறது. வேலையில்லாத, வறுமையில் வாடும் தொழிலாளர்களிடம் பயணக்கட்டணம் கேட்டால் எவ்வாறு கொடுப்பார்கள். இது ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு சந்திரசேகர் ராவ் பேசினார்.