புதுடில்லி: பிரதமரின், ஏழைகள் நலத் திட்டங்களின் கீழ், 34 ஆயிரத்து, 800 கோடி ரூபாய் நிதி, 39 கோடி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்காக, கடந்த மார்ச்சில், 1.70 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில், ஏழைகளுக்கான நலத் திட்டங்களை மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், மத்திய நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: பிரதமரின், ஏழைகள் நலத் திட்டங்களின் கீழ், 39 கோடி பயனாளிகளுக்கு, 34 ஆயிரத்து, 800 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் உதவித்தொகை திட்டத்தின் கீழ், 16 ஆயிரத்து, 394 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதனால், 8.19 கோடி பயனாளிகள் பயனடைந்துஉள்ளனர்.
மேலும், 676 கோடி கிலோ தானியங்கள், 36 மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதனால், 60.33 கோடி பேர் பயனடைந்துள்ளனர். இதேபோல், 24.2 கோடி கிலோ பருப்பு வகைகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால், 5.21 கோடி பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.
இதைத் தவிர, 20.05 கோடி பெண்களின், 'ஜன் தன்' வங்கிக் கணக்குகளில், 10 ஆயிரத்து, 25 கோடி ரூபாய், 'டெபாசிட்' செய்யப்பட்டுள்ளது. தேசிய சமூக உதவித் திட்டத்தின் கீழ், 2.82 கோடி வயதானோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு, 1,400 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது.
இ.பி.எப்.ஓ., எனப்படும், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியத்தின், 9.6 லட்சம் உறுப்பினர்கள், தங்கள் கணக்கில் இருந்து, முன்பணத்தை எடுத்துள்ளனர். இதன் மூலம், 2,985 கோடி ரூபாய், 'ஆன்லைன்' மூலம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நலத் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் பணம், நேரடியாக வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்படுகிறது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.